பிந்து மாதவியிடம் இயக்குனர் பாய்ச்சல்
சென்னை:விமல் வசனத்துக்கு ரியாக்ஷன் காட்டாமல் 15 டேக் வாங்கிய பிந்து மாதவி மீது கோபத்தில் எரிந்து விழுந்தார் இயக்குனர் எழில்.
‘மனம் கொத்திப் பறவை படத்தை அடுத்து எழில் இயக்கும் படம் ‘தேசிங்கு ராஜா. விமல், பிந்துமாதவி ஜோடியாக நடிக்கின்றனர். இதில் நடித்தது பற்றி பிந்து மாதவி கூறியதாவது:
கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்தாலும் குறைந்த காட்சிகளே நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ‘தேசிங்கு ராஜா படத்தில்தான் முதல் முறையாக முழு படத்திலும் வருகிறேன். கிராமத்து பெண்ணாக தாவணி அணிந்து நடிக்கிறேன். இதுவொரு காமெடி ஸ்கிரிப்ட்.விமலும், நானும் நடிக்க வேண்டிய காட்சியில் பரம்பரையாக தங்கள் குடும்பத்தினரிடையே நடக்கும் மோதல் பற்றி விளக்கும் காட்சியில் கொட்டை பாக்குக்காக மோதி கொண்ட பிளாஷ்பேக் சொல்வார். அவர் கொட்டை பாக்கு என்று வசனம் சொன்னதும் எனக்கு சிரிப்பு வந்துவிடும். 15 டேக் ஆகியும் சீன் சரியாக வரவில்லை.
ஷூட்டிங்கில் கோபமே படாத இயக்குனர் எழில், அதை பார்த்து கடுப்பாகிவிட்டார். என் அருகில் வந்து, ‘இப்படியே சிரித்து கொண்டிருந்தால் சீனை முடிக்க முடியாது. வெளிச்சமும் போய்விடும் என்று சற்று கோபமாக கூறினார். அதன்பிறகே காட்சி சரியாக வந்தது. அவர் கோபப்படாமல் இருந்திருந்தால் 100 டேக் கூட வாங்கி இருப்பேன்.