பொள்ளாச்சியில் போதை ஊசி விற்றவர் கைது
பொள்ளாச்சி:பொள்ளாச்சி பகுதியில் கடந்த சில மாதங்களாக மர்ம நபர்கள் சிலர் தேர்நிலை, கோபாலபுரம், மார்க்கெட் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் போதை மருந்து மற்றும் ஊசி விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கிழக்கு பகுதி காவல் நிலைய போலீசார் அந்த பகுதிகளில் நேற்று இரவு ரோந்து சுற்றி வந்தனர். அப்போது பாலகோபாலபுரம் வீதியில் உள்ள தொடக்க பள்ளி வளாகத்துக்கு அருகில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றி திரிந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர்.
அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். அவரிடம் இருந்த பையை வாங்கி பார்த்த போது அதில் 5 பாட்டில் போதை மருந்து மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் 3 ஊசிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், பிடிபட்டவர் பொள்ளாச்சி திலகர் வீதியை சேர்ந்த கதிரேசன் (37) என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.