தீவிரவாதம் என்பது இன்று உலகளாவிய பிரச்னை. இதை வேரறுக்க உலக நாடுகள் ஒன்று திரள வேண்டும் என்பது எல்லா திசையிலும் கேட்கும் பேச்சு. மிகப் பெரிய வல்லரசு நாடாக திகழும் அமெரிக்காவையே நிலைகுலையச் செய்த தீவிரவாத இயக்கம் அல்கொய்தா. இதை நிறுவி மூளையாக செயல்பட்ட ஒசாமா பின்லேடன், கடைசி காலத்தில் பாகிஸ்தானில் 2 ஆண்டுகளாக பதுங்கி இருந்ததும், அவர் தனது குடும்பத்துடன் அந்நாட்டு ராணுவ தலைமையகம் அருகேயே வசித்ததும், அதையும் கண்டுபிடித்து அமெரிக்கா அவரை கொன்றதும் உலகம் அறிந்த விஷயம். அமெரிக்காவையே அச்சுறுத்திய தீவிரவாதி, பாகிஸ்தானில் சுதந்திரமாக உலவியது அந்நாட்டுக்கு பெருமை சேர்க்கும் விஷயமல்ல. இது எதிர்காலத்தில் அவர்களுக்கே பெரிய ஆபத்தை உருவாக்கும் என்பதை சிந்திக்க வைக்கும் விஷயம். ஆனால், பாகிஸ்தான் இதை உணர்ந்ததாக தெரியவில்லை. இப்போது தினம்தினம் அங்கு நடக்கும் தீவிரவாத தாக்குதல்களும், கொத்து, கொத்தாக மக்கள் செத்து மடிவதும் அந்நாட்டை இன்னமும் உணர வைக்கவில்லை.
ஏனெனில், மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹபீஸ் சயீது அங்கு சுதந்திரமாக நடமாடி வருகிறான். மும்பையில் 2008ம் ஆண்டு தீவிரவாதிகள் தாக்குதல் முதல் சமீபத்தில் பூஞ்ச் எல்லை பகுதியில் இந்திய வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது வரை பல சதி செயல்களை நிறைவேற்றி பல ஆண்டாக இந்தியா மட்டுமின்றி, அமெரிக்கா கண்ணிலும் மண்ணை தூவி நடமாடி வரும் தீவிரவாதி ஹபீஸ். ஜமாஅத் துவா அமைப்பின் தலைவன். பாகிஸ்தான் லாகூர் நகரில் பங்களாவில் வசிக்கிறான். அங்கு ராணுவத்தின் துணையுடன் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்து இந்தியாவில் ஊடுருவச் செய்வது, சதி செயல்களை செய்ய வைப்பதுதான் இவன் வேலை. இவனை மும்பை தாக்குதலில் முக்கிய குற்றவாளியாக பிரகடனப்படுத்தி, ஒப்படைக்கும்படி பாகிஸ்தான் அரசுக்கு பல முறை இந்தியா கடிதம் அனுப்பி விட்டது.
‘எங்கள் மண்ணில் சயீது இல்லவே இல்லை’ என்று தொடர்ந்து மறுத்தது பாகிஸ்தான் அரசு. ஆனாலும் சயீது அங்கிருந்தபடி ட்விட்டரில் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்து வந்தான். லாகூர் கடாபி மைதானத்தில் நேற்று முன் தினம் நடந்த ரம்ஜான் தொழுகைக்கு சயீது தலைமை தாங்கி நடத்தியுள்ளான். இதை காட்டும் படங்களும் வெளியாகி இருக்கின்றன. தீவிரவாதி என்றால், அவன் நம் நாட்டைச் சேர்ந்தவனாக இருந்தாலும் ஒழிக்கப்பட வேண்டியவன் என்பதை பாகிஸ்தான் உணர்ந்தாக வேண்டும்.