தென் ஆப்ரிக்காவில் நடந்து வரும் 3 நாடுகள் கிரிக்கெட் போட்டியில் நேற்று இந்தியா ஏ- ஆஸ்திரேலியா ஏ அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஆஸி. 8 விக்கெட் இழப்பிற்கு 298 ரன் குவித்தது. அந்த அணி 37 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் தான் சேர்த்திருந்தது. ஆனால் மெக்ஸ்வேல் அதன் பின்னர் அதிரடியாக விளையாடி 79 பந்தில், 6 சிக்சர்கள், 18 பவுண்டரிகளுடன் 145 ரன் விளாசி மிரட்டினார். அவருக்கு உறுதுணையாக ஆடிய ஹசல்வுட் 21 ரன் சேர்த்தார். இந்த ஜோடி 9வது விக்கெட்டுக்கு 13.4 ஓவரில் 146 ரன் குவித்தது ஆட்டத்தின் சிறப்பம்சமாக இருந்தது.
299 ரன்கள் இலக்குடன் இந்திய அணி ஆடியது. ரோகித் ஷர்மா 66, தவான் 15, புஜாரா 29, ரெய்னா 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். 46 ஓவரில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் எடுத்தது. கடைசி 4 ஓவரில் வெற்றிக்கு 23 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இதனால் இந்திய அணி எளிதில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஆஸி. பந்து வீச்சாளர்கள் கவுட்லர், ஹசல்வுட் ஆகியோர் நேர்த்தியாக பந்து வீசி ரன்குவிப்பை கட்டுப்படுத்தியதுடன் விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டனர். தினேஷ் கார்த்திக் 10, அம்பாதி ராயுடு 70, பின்னி 0 ரன்களில் வெளியேறினர். முடிவில் இந்திய ஏ அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 7 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி. ஏ அணி த்ரில் வெற்றி பெற்றது. இன்று பிற்பகலில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா ஏ, தென் ஆப்ரிக்கா ஏ அணியை எதிர்த்து ஆடுகிறது.