‘சுப்ரமணியபுரம்’ படத்தில் ஜெய் ஜோடியாக நடித்த சுவாதி, தமிழில் தேர்வு செய்தே படங்களை ஒப்புக்கொள்கிறார். சசிகுமார் ஜோடியாக ‘போராளி’ படத்தில் நடித்ததை தொடர்ந்து தற்போது புதிய படமொன்றில் ஜெய் ஜோடியாக மீண்டும் நடிக்கிறார். வெங்கட்பிரபுவின் உதவியாளர் சரவண ராஜன் இயக்கும் இப்படத்துக்கு அனிரூத் இசை அமைக்கிறார்.
படம் தவிர்க்கும் கவி
கவிஞர் வைரமுத்து, தான் பாடல் எழுதும் எல்லா படத்தையும் பார்ப்பதில்லை. ஒரு சில படங்களைத்தான் பார்க்கிறார். சமீபத்தில் அவர் பாடலில் உருவான ‘களவாடிய பொழுதுகள்’ படத்தை பார்த்தார். தான் பாடல் எழுதிய படங்களையே பார்க்காமல் தவிர்ப்பதற்கு காரணம் இருக்கிறதாம். சில படங்களில்தான் அவரது பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து காட்சிகள் படமாக்கப்படுகிறதாம். அந்த படங்களை மட்டுமே அவர் பார்க்கிறாராம். சில படங்களில் வரிகள் புலப்படாது. அதை பார்த்தால் வருத்தம் ஏற்படும் என்பதால் அப்படங்களை பார்க்காமல் தவிர்த்து விடுகிறாராம்.
வாலி கடைசி பாடல்
மறைந்த கவிஞர் வாலி, கடைசியாக வசந்தபாலன் இயக்க உள்ள ‘காவிய தலைவன்’ படத்துக்கு பாடல் எழுதினார். இப்படத்தின் ஷூட்டிங் இன்று முதல் தொடங்குகிறது. இதில் சித்தார்த் ஹீரோ. தமிழ், தெலுங்கு இருமொழியில் உருவாகும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார்.
டாடியும் தாடியும்
சிம்புவின் தந்தையாக நடிக்க டி.ராஜேந்தரை சில இயக்குனர்கள் கேட்டார்களாம். ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டார். நடிக்க மறுப்பது ஏன் என்பதற்கு பதில் அளித்தார். ‘‘வீட்டில்தான் நான் சிம்புக்கு ‘டாடி’. வெளியிடங்களில் நான் வெறும் ‘தாடி’. அவ்வளவுதான். எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் சிம்புவின் அப்பாவாக படத்தில் நடிக்க மாட்டேன்’’ என தனது பாணியில் பதில் சொல்கிறார்.