கோவை பெண் எஸ்.ஐ. தூக்கு போட்டு தற்கொலை
திருப்பூர்: தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் பணியாற்றிய பெண் சப் இன்ஸ்பெக்டர் நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பூர் திருநீலகண்டபுரத்தை சேர்ந்தவர் கணேசன் (35). பனியன் நிறுவன ஊழியர். இவரது மனைவி அம்சவேணி (27). இவர்களுக்கு ராகுல் (4) என்ற மகன் உள்ளார். கோவைப் புதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் 4 ஆண்டாக சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். அவர் கோவை சின்னியம்பாளையத்தில் உள்ள தனது அம்மா வீட்டில் இருந்தும், அவ்வப்போது திருப்பூரில் இருந்தும் வேலைக்கு சென்று வந்தார்.
பத்து நாட்களுக்கு முன்பு விடுமுறையில் திருப்பூர் வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் நேற்று இரவு 8 மணியளவில் தகராறு ஏற்பட்டது. இருவரும் காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென்று அம்சவேணி கோபத்துடன் அறைக்கு சென்று தூக்கு போட்டு கொண்டார். இவரது கணவர் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர்கள் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று அம்சவேணியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து கணவரிடம் விசாரிக்கின்றனர்.