பைக், நகை திருடிய 3 பேர் கைது 7 பைக், ஏழரை பவுன் நகை பறிமுதல்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பகுதியில் தொடர்ந்து பைக் திருட்டு மற்றும் தனியாக நடந்து செல்லும் வயதான பெண்களிடம் நகை பறிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வந்தது. இதையடுத்து எஸ்.பி. விஜயகுமார் உத்தரவின் பேரில் ஏடிஎஸ்பி பாஸ்கரன், டிஎஸ்பி பாலச்சந்திரன், சிவகாஞ்சி இன்ஸ்பெக்டர் பிரபாகர், எஸ்ஐ சந்திரமோகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் பொன்னேரி கரை பகுதியில் தனிப்படை போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது 3 பேர் பைக்கில் வந்தனர். அவர்களை மடக்கி விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசினர். தீவிர விசாரணையில் அவர்கள், ஓரிக்கை சின்ன அய்யங்கார்குளம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (35), ராஜ் (22), கேரள மாநிலம் புத்தூர் ஹவுஸ் கொண்டாரக்கரை பகுதியை சேர்ந்த சத்யா (60) என்பதும் பைக் மற்றும் செயின் பறிக்கும் கும்பல் என தெரிந்தது. அவர்களிடம் இருந்து 7 பைக், ஏழரை பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து 3 பேரையும் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.