பெரியகோயில் அகழி நிரம்பி தஞ்சையில் வெள்ளம் புகுந்தது
தஞ்சை: தஞ்சை பெரிய கோயில் அகழி நிரம்பி ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் தஞ்சையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கல்லணையில் இருந்து கல்லணை கால்வாய் வழியாக திறக்கப்படும் தண்ணீர் புது ஆறாக தஞ்சை பெரிய கோயில் அருகே ஓடுகிறது. புது ஆற்றில் இருந்து பெரிய கோயிலை சுற்றியுள்ள அகழியில் தண்ணீர் நிரப்பப்படும். நேற்று அகழிக்கு தண்ணீர் விடப்பட்டது. அகழி நிரம்பி கோயிலின் பின்பக்கம் உள்ள மேல அலங்கம் வழியாக நேற்று இரவு ஜெபமாலைபுரம் குடியிருப்பு பகுதியில் 2 தெருக்களில் வெள்ளம் புகுந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் வெள்ளக்காடானது. காலையில் வெள்ளம் மேலும் அதிகரித்தது. இதனால் வீதிகளில் மக்கள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் இன்று காலை நகராட்சி ஊழியர்கள் மற்றும் மக்கள் அகழி கரையை அடைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் 10 மணி வரை அடைக்க முடியவில்லை. தண்ணீர் அதிகரித்து கொண்டே இருந்தது. மேல அலங்கத்தை சேர்ந்த ராமன் என்பவர் கூறுகையில், புது ஆற்றில் சரியாக தூர் வாராததால் தண்ணீர் தாராளமாக செல்ல முடியவில்லை. இதுபோல பெரிய கோயில் அகழியும் இது வரை பராமரிப்பு இன்றி இருந்தது. இதனால் தண்ணீர் செல்ல முடியாமல் வெளியேறுகிறது. மேட்டூர் அணை நிரம்பி வந்த நிலையிலேயே இதை சீரமைத்திருக்க வேண்டும். அதிகாரிகள் அலட்சியத்தால் இன்று தஞ்சைக்குள் வெள்ளம் புகுந்து விட்டது என்றார்.