கர்நாடகாவில் இரண்டு நகரங்களில் ஐகோர்ட் கிளை: மத்திய அரசு ஒப்புதல்
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் தர்வாத் மற்றும் குல்பர்கா ஆகிய 2 நகரங்களில் ஐகோர்ட் கிளை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதே சமயம் திருவனந்தபுரத்தில் ஐகோர்ட் கிளை அமைப்பது தொடர்பான கேரள அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் அதன் தலைநகரங்களில் ஐகோர்ட் செயல்பட்டு வருகிறது. தமிழகம், உ.பி., ம.பி போன்ற ஒரு சில மாநிலங்களில் தலைநகர் தவிர மற்றொரு இடத்திலும் ஐகோர்ட் கிளை செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் மதுரையிலும், உ.பி.யில் அலகாபாத்திலும், ம.பி.யில் இந்தூரிலும் ஐகோர்ட் கிளை உள்ளது. கேரளாவில் அதன் தலைநகராக திருவனந்தபுரத்தில் ஐகோர்ட் இல்லை. அதன் துறைமுக நகரான கொச்சியில்தான் ஐகோர்ட் உள்ளது.
இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள தர்வாத் மற்றும் குல்பார்காவில் ஐகோர்ட் கிளை அமைக்க அந்த மாநில அரசு கோரிக்கை விடுத்தது. இதற்கு அந்த மாநில ஐகோர்ட்டும் ஒப்புதல் அளித்தது. இதை தொடர்ந்து அந்த இடங்களில் ஐகோர்ட் கிளை அமைக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்காக இந்தக் கோரிக்கை தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் திருவனந்தபுரத்தில் ஐகோர்ட் கிளை அமைக்க மத்திய அரசு மறுத்துவிட்டது. அந்த மாநில ஐகோர்ட் தலைமை நீதிபதி கிளை அமைக்க ஒப்புதல் அளிக்கவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதே போல் மேற்கு வங்க மாநிலம் ஜல்பய்குரியில் ஐகோர்ட் கிளை அமைப்பதற்கான கோரிக்கையும், இமாச்சல பிரதேசம் தர்மசாலாவில் கிளை அமைப்பதற்கான கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்த மாநில தலைமை நீதிபதிகள் ஒப்புதல் அளிக்காததே நிராகரிப்புக்கு காரணம் என மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.