தொழில் செய்பவர்களுக்கு அடிக்கடி அதிக பணம் தேவைப்படும். அதற்காக அதிக வட்டி இருந¢தாலும் பரவாயில்லை என கடன் வாங்குகிறார்கள். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் வரவில்லை என்றால் கடனை திரும்ப கொடுக்க முடியாமல் தடுமாறுகிறார்கள். கந்து வட்டிக் கடன் என்பதால் வட்டி விஷம் போல் உயர்ந்து, கழுத்தை நெரிக்கிறது. நாகர்கோயிலில் மீட்டர் வட்டிக்கு கடன் வாங்கிய காடை பண்ணை உரிமையாளர், வட்டி கொடுக்க முடியாமல் காருக்குள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நாகர்கோவில் உடையப்பன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். காடை பண்ணை நடத்தி வருகிறார். லெட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இரு தினங்களுக்கு முன் காடை குஞ்சுகள் எடுத்து வருவதற்காக தனக்கு சொந்தமான காரில் கிருஷ்ணகுமார் வெளியூர் புறப்பட்டார். ஆனால் இரு நாட்களாகியும் வீடு வந்து சேரவில்லை. இந்தநிலையில் கிருஷ்ணகுமாரின் கார், காடை பண்ணையின் பின்புற வளாகத்தில் நின்றது. துர்நாற்றமும் அதிகமாக வீசியது. போலீசார் காருக்குள் சோதனை நடத்திய போது உள்ளே இரு கடிதங்களும், குளிர்பான பாட்டில்களும் கிடந்தது. அந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். இறந்து போன கிருஷ்ணகுமார் தொழில் ரீதியாக பல்வேறு இடங்களில் கடன் வாங்கி இருந்தார். கடனை அடைக்க முடியாமல் கஷ்டப்பட்டு வந்த நிலையில் தான் தற்கொலை செய்து இருக்கிறார். பறிமுதல் செய்யப்பட்ட 2 கடிதத்தில் பல முக்கிய தகவல்களை கூறி இருப்பதாக தெரிகிறது. மீட்டர் வட்டி வசூலிக்கும் 10 முக்கிய நபர்களின் பெயர்களையும், அவரது மொபைல் எண்களையும் கிருஷ்ணகுமார் பட்டிய லிட்டு இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மீட்டர் வட்டி கும்பலை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கந்து வட்டி, மீட்டர் வட்டிக்கு கடன் கொடுப்பவர்கள் ரத்தத்தை உறிஞ்சும் அட்டை போல் கடன்காரர்களின் பணம் முழுவதையும் உறிஞ்சி விடுவார்கள். வட்டியை தராவிட்டால் வீடு ஏறி வந்து அசிங்க மாக திட்டுவார்கள். ஆளை கடத்திக் கொண்டு போய் அடைத்து வைத்து மிரட்டுவார்கள். இந்த அசிங்கத்துக்கு பயந்தே பலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். கந்து வட்டிக்காரர்களுக்கு போலீசாரும் உடந்தையாக இருப்பதால், அவர்கள் யாருக்கும் பயப்படுவதில்லை. கந்து வட்டியை ஒழித்தால்தான் இதுபோன்ற தற்கொலையை தடுக்க முடியும்.