மணல் கொள்ளையால் அன்றாடம் நடக்கும் விபரீத நிகழ்ச்சிகள் ஏராளம். மணல் கொள்ளையை தடுக்க முயன்ற தாசில்தார் மீது லாரி ஏற்றி கொல்ல முயற்சி, ஏரியில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளியதால் ஏற்பட்ட புதைகுழிகளில் சிக்கி குழந்தைகள் பலி என்று தினம்தினம் நாளேடுகளில் செய்திகள் வருகின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் மணல் கொள்ளையை தடுக்க புதுபுது விதிமுறைகளை அம்மாநில அரசுகள் கொண்டு வருகின்றன. ஆனால், எல்லாவற்றையும் மீறி அவை தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதற்கு காரணம் அரசியல் சக்திகள் என்பது வெளிப்படையாக தெரிந்த விஷயம்.
உ.பி. மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் பணியாற்றிய பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்கா சக்தி நக்பால், யமுனை ஆற்றில் மணல் கொள்ளையை தடுத்தார். இதில் உ.பி.யில் ஆட்சியில் உள்ள சமாஜ்வாடி கட்சியினர் பாதிக்கப்பட்டனர். உள்ளூர் கட்சித் தலைவர் நரேந்திரபட்டி என்பவர், இது பற்றி சமாஜ்வாடி தலைவர் முலாயமிடமும், முதல்வர் அகிலேஷிடமும் புகார் செய்தார். உடனே, துர்காவை வேறொரு காரணத்தை குறிப்பிட்டு அம்மாநில அரசு சஸ்பெண்ட் செய்தது. இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது.
இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வக்கீல் ரித்விக் தத்தா என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘உ.பி.யில் யமுனை மற்றும் கிளை நதிகளிலும் மணல் அள்ளுவதன் மூலம் இயற்கை வளம் அழிந்து சுற்றுச் சூழல் பாதிக்கப்படுகிறது. மணல் கொள்ளையை தடுத்த பலர் கொல்லப்பட்டுள்ளனர். மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளும் பாதிக்கப்படுகின்றனர். தற்போது, மணல் கொள்ளையை தடுத்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்கா சக்தி, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். எனவே, யமுனையில் மணல் அள்ளுவதை தடுக்க உத்தரவிட வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.
இதை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சக அனுமதி பெறாமல், நாட்டின் எந்த மூலையிலும் மணல் அள்ள தடை விதித்துள்ளது. இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இந்த வாய்ப்பை மத்திய அரசு சரியாக பயன்படுத்தி, நாடு முழுவதும் மணல் கொள்ளையை தடுக்க ஒரு புதிய சட்டத்தை இயற்றலாம். அல்லது, நாடு முழுவதும் சீரான விதிமுறைகளை ஏற்படுத்தலாம். அந்த சட்டவிதிகளில் மணல் கொள்ளையர்கள் தப்பிச் செல்ல வாய்ப்பு தரும் ஓட்டைகள் இருக்கக் கூடாது என்பதுதான் மிக முக்கியமான தேவை.