திருப்பதி:ஆந்திராவில் எம்பி, எம்எல்ஏக்கள் வீடுகளை போராட்ட குழுவினர் திடீரென முற்றுகையிட்டனர். தொடர்ந்து 6வது நாளாக பந்த் நடைபெறுவதால் திருப்பதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா பிரச்னை தொடர்பாக ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் இன்று 6வது நாளாக பந்த் நடக்கிறது. இன்று அதிகாலை முதல் ராயலசீமா, ஆந்திர பகுதிகளில் மாணவர்கள் இயக்கம் மற்றும் பல்வேறு சங்கங்கள் அமைப்பினர், ஒருங்கிணைந்த ஆந்திரா பாதுகாப்பு கமிட்டி, ஒருங்கிணைந்த ஆந்திரா கூட்டு நடவடிக்கை குழு, ஏபிஎன்ஜிஓஎஸ் ஊழியர் சங்கம் உள்பட ஏராளமானோர் தர்ணா போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம் முன் மாணவர்கள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஏராளமான மாணவர்கள் நேற்று முன்தினம் மாலை முதல் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் 2 மாணவர்கள் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் இன்று அதிகாலை 2 மணியளவில் போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து திருப்பதி ரூயா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆந்திர மாநில நகராட்சி ஊழியர்கள் சங்க ராயலசீமா, ஆந்திரா கூட்டு நடவடிக்கை குழு பொதுச் செயலாளர் லோகேஷ்வர்மா தலைமையில் அனைத்து ஊழியர்களும் 72 மணி நேரம் பணி நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். திருப்பதி மாநகராட்சி ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து விட்டு ஊர்வலமாக சென்று தெலுங்கு தாய் சிலைக்கு பாலாபிஷேகம் செய்தனர். திருப்பதியில் தொடர்ந்து தர்ணா மற்றும் பல்வேறு போராட்டங்கள் நடைபெறுவதால் துணை ராணுவம் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 144 தடை உத்தரவு இன்று காலை முதல் அமல்படுத்தப்பட்டது. இதற்கிடையில், கர்னூல் முன்னாள் எம்பி பூமநாகரெட்டி, ஆந்திர அமைச்சர் வெங்கடேஷ் தலைமையில் தனித்தனியாக தர்ணா மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகிறது. ஐதராபாத் சட்டமன்ற வளாகத்தில் ராயலசீமா, ஆந்திரா ஊழியர்கள் பணி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.