Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
05
Aug
காவிரி ஆற்று வெள்ளத்தில் சிக்கி தவித்த 4 பேர் ஹெலிகாப்டரில் பத்திரமாக மீட்பு ஒகேனக்கல்லில் விடிய விடிய திக்... திக்...

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

தர்மபுரி:ஒகேனக்கல்லில் காவிரி ஆற்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட 4 பேர் மரக்கிளையை பிடித்தபடி விடிய விடிய போராடி வந்தனர். அவர்கள் 4 பேரும் இன்று காலை 2 ஹெலிகாப்டர்கள் முலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். சோர்வான நிலையில் இருந்த அனைவரும் பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் பந்தனஅள்ளி செல்லன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் மாதப்பன் (எ) துரைராஜ். உறவினர் ஒருவரது இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக நேற்று ஒகேனக்கல் வந்தார். நேற்று மாலை 3 மணிக்கு முதலை பண்ணை அருகே இறுதிச் சடங்கை முடித்துவிட்டு, சிலர் காவிரி ஆற்றில் குளித்தனர். கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த மாதப்பன், திடீரென வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். இதை பார்த்ததும் மற்றவர்கள் கூச்சலிட்டனர்.

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாதப்பன், மாமரத்து கடவு பரிசல் துறை அருகே ஒரு மரக் கிளையை பிடித்துக் கொண்டார். பின்னர், தட்டுத்தடுமாறி மரத்தின் மீது ஏறினார். ‘காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்’ என கூச்சலிட்டார். தகவலறிந்த அதிகாரிகளும் போலீசாரும் விரைந்து வந்து மாதப்பனை மீட்பது குறித்து ஆலோசித்தனர். அப்போது பரிசல் ஓட்டிகளான ராமகிருஷ்ணன், முத்து, சகாதேவன் ஆகியோர் மாதப்பனை மீட்க பரிசலில் சென்றனர். தண்ணீரின் வேகத்தில் பரிசல் இழுத்து செல்லப்பட்டது. நீரில் குதித்து தத்தளித்த 3 பேரும் மரத்தில் ஏறி தப்பினர். இதையடுத்து, அனுபவம் வாய்ந்த பரிசல் ஓட்டிகள் 3 பேர் மற்றொரு பரிசலில் சென்றனர். நீரின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அவர்கள் கரை திரும்பிவிட்டனர். இதனால் மீட்பு பணி முடங்கியது.

கலெக்டர் விவேகானந்தன் மற்றும் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள், இதுபற்றி முதல்வர் ஜெயலலிதாவுக்கு தகவல் தெரிவித்தனர். வெள்ளத்தில் சிக்கிய 4 பேரையும் மீட்பதற்கு பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி, நேற்றிரவு 47 பேர் கொண்ட மீட்பு குழுவினர் அரக்கோணத்தில் இருந்து கார் மூலம் தர்மபுரிக்கு புறப்பட்டனர்.

மேற்கு மண்டல ஐஜி டேவிட்சன் ஆசிர்வாதம், எஸ்பி ஆஸ்ரா கார்க், கிருஷ்ணகிரி எஸ்பி செந்தில்குமார், டிஐஜி சஞ்சய்குமார் ஆகியோர் ஒகேனக்கல்லில் முகாமிட்டு ஆற்றில் சிக்கியவர்களை மீட்பது குறித்து ஆலோசனை நடத்தினர். கலெக்டர் விவேகானந்தன், வருவாய் அதிகாரி ராமர் மற்றும் ஆர்டிஓ மேனகா ஆகியோர் நள்ளிரவு வரை அங்கு இருந்தனர்.

அரக்கோணத்தில் இருந்து வந்த மீட்பு குழுவினர் காஷியப், பக்வன் சிங் ஆகியோர் தலைமையில் மீட்பு நடவடிக்கைகளை துவங்கினர். முதலில் மரத்தில் ராட்சத ஏணி போட்டு மீட்க முயன்றனர். 2 மணி நேரம் முயன்றும் பலன் கிடைக்கவில்லை. நாமக்கல்லில் இருந்து ரிக்வண்டிகளை வரவழைத்து மீட்கும் முயற்சியும் தோல்வியில் முடிந்தது. ஹெலிகாப்டர் மூலம்தான் அவர்களை மீட்க முடியும் என்று மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து, இன்று காலை 7.10 மணிக்கு சூலூர் மற்றும் பெங்களூரில் இருந்து 2 ஹெலிகாப்டர்கள் ஒகேனக்கல்லுக்கு வந்தன. முதலில் இரண்டு ஹெலிகாப்டர்களும் வானில் 10 முறை வட்டமிட்டது. பின்னர் சூலூர் ஹெலிகாப்டரில் இருந்து மீட்பு படையினர் நீளமான கயிறு கட்டி மரத்தில் இருந்தவரை நோக்கி இறக்கினர்.

அதை பிடித்தபடி 10 நிமிடத்தில் ஒருவர் மீட்கப்பட்டார். பின்னர் 7.20 மணிக்கு அதே முறையில் 2 வது நபரையும் மீட்டனர். பெங்களூரில் இருந்து வந்த ஹெலிகாப்டர் மூலம் 3&வது நபரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டபோது சிறிது சிரமம் ஏற்பட்டது. 20 நிமிடம் தாமதமாக 3&வது நபர் மீட்கப்பட்டார். 4&வது நபரை மீட்க கயிறை இறக்கியபோது மரக்கிளைகளில் சிக்கிக் கொண்டது. பின்னர் வேறு கயிறு கட்டி, 4&வது நபரையும் பத்திரமாக மீட்டனர். இதையடுத்து அங்கு கூடியிருந்தவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். மீட்கப்பட்டவர்கள் அனைவரும் சோர்வாக காணப்பட்டதால் பென்னாகரம் ஜி.ஹெச்.க்கு அனுப்பி வைத்தனர். அமைச்சர் பழனியப்பன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் அன்பழகன், பால் வள தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் மீட்பு பணியை பார்வையிட்டனர்.

உயிர் தப்பியது தெய்வச் செயல்

ஆற்றில் விடிய விடிய சிக்கித் தவித்த ராமகிருஷ்ணன், உயிர் தப்பியது குறித்து கூறுகையில், ‘‘நேற்று மதியம் 3 மணிக்கு ஒருவர் ஆற்றில் தவறி விழுந்து தத்தளித்தார். அவரை மீட்குமாறு அதிகாரிகள் கூறினர். அவரை மீட்பதற்காக சென்றபோது ஆற்றில் நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் பரிசல் இழுத்து செல்லப்பட்டது. அதில் இருந்து குதித்து நீந்தி மரத்தில் ஏறி உயிர் தப்பினேன். இருட்டி விட்டதால் மீட்பு பணியை நிறுத்திவிட்டனர். இதனால் விடிய விடிய உயிரை கையில் பிடித்தபடி தவித்தோம். நல்லவேளையாக ஹெலிகாப்டர் உதவியுடன் எல்லோரையும் பத்திரமாக மீட்டு விட்டனர். இதற்காக அதிகாரிகள் மற்றும் மீட்பு படையினருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்’’ என்றார்.

 மீட்கப்பட்ட முத்து கூறும்போது, ‘சினிபால்ஸ்க்கு 10 அடிதூரம் தொலைவில் செல்லும்போது நீரின் வேகம் அதிகரித்ததால் பரிசல் தள்ளாடியது. விபரீதத்தை உணர்ந்து, உடனடியாக ஆற்றில் குதித்து அருகில் இருந்த மரக்கிளையை பிடித்து, தெய்வாதீனமாக உயிர் பிழைத்தேன்’’ என்றார்.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran