தண்டையார்பேட்டை:சென்னை கொடுங்கையூர், ராஜரத்தினம் நகரை சேர்ந்தவர் சரவணன் (40), டெய்லர். மனைவி அஞ்சலை (36), பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை செய்தார். இவர்களுக்கு ஸ்ரீகாந்த் (6), நிவேஷ் (4) என்ற மகன்கள் உள்ளனர். அஞ்சலையின் நடத்தையில் சரவணனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு நடக்கும். இந்நிலையில் சரவணன் வீடு நேற்று முழுவதும் மூடியே கிடந்தது. மாலையில் திடீரென வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்தது. அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர்.
அங்கு அஞ்சலை எரிந்த நிலையில் கிடந்தார். உடனே கொடுங்கையூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உதவி கமிஷனர் மனோகரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர். சரவணன் மற்றும் பிள்ளைகளை காணவில்லை. அக்கம் பக்கத்தில் விசாரித்த போது, முத்துமாரியம்மன் கோயில் ஆடி திருவிழாவில் சுற்றி திரிவதாக தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த போலீசார் சரவணனை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணைக்கு பின்னர் போலீசார் கூறியதாவது:
அஞ்சலை நடத்தை மீது சந்தேகப்பட்ட சரவணன் நேற்றுமுன்தினம் மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். பின்னர், அப்பகுதியில் நடக்கும் திருவிழா சாமி ஊர்வலத்துக்கு மகன்களை அனுப்பி விட்டு மனைவியை உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். தலையணையால் முகத்தை அழுத்தி கொலை செய்துள்ளார். அதன்பின் உடலை எரித்துள்ளார். பாதி எரிந்ததும் அணைத்து விட்டு ஊதுவர்த்தியை கொளுத்தி வைத்துள்ளார். பின்னர் கதவை பூட்டி விட்டு சென்றுள்ளார். இவ்வாறு போலீசார் கூறினர்.
ஆனால், ‘மனைவியை கொலை செய்யவில்லை, சந்தேகப்பட்டு அடித்ததால் ஆத்திரம் அடைந்து அவளே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். காப்பாற்ற முயன்ற போது மயங்கி கீழே விழுந்ததால் இறந்துவிட்டதாக நினைத்து வீட்டுக்கு செல்லாமல் குழந்தைகளுடன் வெளியில் சென்று விட்டேன் என்று சரவணன் கூறியுள்ளார். இதில் எது உண்மை என போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.