இங்கிலாந்துடன் 3வது டெஸ்ட் வெற்றி பெறுமா ஆஸ்திரேலியா
இங்கிலாந்து & ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆசஷ் தொடர் நடந்து வருகிறது. முதல் 2 போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 3வது போட்டி ஓல்டுடிராபோர்டில் நடந்து வருகிறது. ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 527 ரன்னுக்கு டிக்ளேர் செய் தது. தொடர்ந்து முதல் இன்னிங்சில் ஆடிய இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.
368 ரன்களுக்கு இங்கிலாந்து அணி தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பீட்டர்சன் அபாரமாக ஆடி 113 ரன் குவித்தார். பெல் 60 ரன் எடுத்தார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணி தனது 2வது இன் னிங்சை தொடர்ந்தது. முதல் இன்னிங்சில் ரன் குவித்தது போல் அவர் களால் ரன்களை குவிக்க முடியவில்லை. அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. 4வது நாளான நேற்று ரோகர்ஸ் 12, வார்னர் 41, கவாஜா 24, வாட்சன் 18, ஸ்மித் 19, ஹேடின் 8, ஸ்டார்க் 11 ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். கேப்டன் கிளார்க் 30 ரன்னுடனும், ஹேரிஸ் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து 172 ரன் எடுத்திருந்த போது போதிய வெளிச்சம் இன்மை காரணமாக ஆட்டம் தடைபட்டது.
அதன்பிறகு மழை குறுக்கிட்டது. இதையடுத்து அம்பயர்கள் ஆட்டத்தை தொடர்ந்து நடத்த முடியாது என்று கூறி ஆட்டத்தை முடித்து கொள்வதாக அறிவித்தனர். இது ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறைந்தபட்சம் 30 ஓவர்கள் வீசக்கூடிய நிலையில் இருந்த போதும் ஆட்டம் நிறுத்தப்பட்டது. நேற்று ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 331 ரன் கூடுதலாக பெற்றிருந்தது.
இந்த மைதானத்தில் 4வது இன்னிங்சில் 294 ரன்னுக்கு மேல் எந்த அணியும் சேஸ் செய்து வெற்றி பெறவில்லை. ஆனால் நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய 331 ரன் கூடுதலாக பெற்றிருக்கிறது. ஒருநாள் எஞ்சியுள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற கடுமையாக போராடும். ஆனால் மழை முட்டுக்கட்டை போடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.