ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில் 2 மாதங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து காற்றுடன் பலத்த மழை பெய்து வந்தது. ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 மாவட்டங்களில் தொடர் மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள அப்பர் பவானி, அவிலாஞ்சி, பைக்காரா, பார்சன்ஸ்வேலி உள்பட அனைத்து அணைகளும் நிரம்பி வழிகின்றன. அணையின் பாதுகாப்பு கருதி தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
கடந்த 2 மாதமாக பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து விவசாய பணிகள் பாதிக்கப்பட்டது. ஊட்டி மற்றும் புறநகர் பகுதிகளில் காற்றுடன் சாரல் மழை பெய்து வந்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குளிர் அதிகம் காணப்பட்டதால் மக்கள் வெளியில் நடமாட முடியாமல் தவித்து வந்தனர். சுற்றுலா பயணிகள் வருகையும் குறைந்தது.
சுற்றுலா தலங்கள் 2 மாதமாக சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. சுற்றுலா பயணிகளின் வருகையை நம்பி பல்வேறு தொழில்களில் ஈடுபட்டவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மழையால் மின் கம்பங்கள் சரிந்ததில் மின் வாரியத்துக்கு சுமார் ரூ.10 லட்சத்துக்கு மேல் இழப்பு ஏற்பட்டது. அதே போல் 100 கிலோ மீட்டருக்கு பல்வேறு சாலைகள் சேதம் அடைந்துள்ளன.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக ஊட்டியில் மழையின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. பல நாட்களுக்கு பிறகு இன்று காலை நல்ல வெயில் அடித்தது. மழை குறைந்து வானம் தெளிவாக காணப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சாலைகள், மார்க்கெட் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வெயில் அடிக்க துவங்கி உள்ளதால் விவசாயிகள் தேயிலை செடிகளுக்கு உரம் இடும் பணியை தொடங்கி உள்ளனர்.