கூர்காலாந்து போராட்டங்களால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு : டார்ஜிலிங் ஸ்தம்பித்தது
டார்ஜிலிங்: தெலங்கானா எதிரொலியாக மேற்குவங்கத்தில் தற்போது கூர்காலாந்து தனி மாநிலம் கோரி போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன. அங்கு நடைபெறும் பந்த் காரணமாக டார்ஜிலிங் ஸ்தம்பித்துள்ளது.ஆந்திராவில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த போராட்டங்களுக்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் தெலங்கானா தனி மாநிலம் உருவாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து, மேற்குவங்கம் உள்பட 4 மாநிலங்களில் தனி மாநில கோரிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன. அசாமில் தனி மாநிலம் கோரி பழங்குடியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில முதல்வர் தருண் கோகய் கூறுகையில், Ôஅசாமை பிரிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. எனவே ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்Õ என்றார். அதேபோல் மேற்குவங்க மாநிலத்தில் டார்ஜிலிங் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கி கூர்க் இனத்தவர்கள் கூர்காலாந்து தனி மாநிலம் கோரி போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். கடந்த சில தினங்களாக அங்கு நடைபெற்று வரும் போராட்டம் மற்றும் பந்த் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பிரதான கட்சியான கூர்க் ஜன முக்தி மோர்ச்சா கட்சியினர் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர். கட்சி தலைவர் பிமல் குருங் கூறுகையில், Ôதெலங்கானா தனியாக பிரியும் போது, மேற்குவங்க அரசு ஏன் கூர்காலாந்தை தனி மாநிலமாக்க கூடாது?Õ என்று கேள்வி எழுப்பியுள்ளார். டார்ஜிலிங், கலிம்போங், குருஷோங் ஆகிய பகுதிகளில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து முற்றிலும் முடங்கியதால் மலை சாலைகள் வெறிச்சோடின. முக்கிய இடங்களில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் தனி மாநிலம் கோரி போராட்டங்களில் ஈடுபட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.