சென்னை:சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் இயக்குனரும் நடிகருமான சேரன். இவருக்கு செல்வராணி என்ற மனைவியும், நிவேதா (23), தாமினி (20) என்ற மகள்களும் உள்ளனர்.
நேற்று எழும்பூரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தந்தை சேரன் மீது தாமினி பரபரப்பு புகார் அளித்தார். அதில், சூளைமேட்டை சேர்ந்தவர் சந்துரு (25). துணை இயக்குனராகவும், டான்சராகவும் உள்ளார். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்கிறார். நாங்கள் காதலிக்கிறோம். என் தந்தையும் அவருக்கு நெருக்கமான சினிமா ஆட்களும், பெட்ரோல் பங்க் உரிமையாளர் ஒருவரும், சந்துருவை மறந்து விடு என்று என்னை மிரட்டுகின்றனர். பல தடவை சந்துருவை கொலை செய்யவும் முயற்சி நடந்துள்ளது. என்னை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்து இருந்தனர். காதலனுடன் என்னை சேர்த்து வைக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்த உதவி கமிஷனர் சியாமளா தேவிக்கு போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். இதையடுத்து, நேற்று இரவு ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் சேரன் மற்றும் அவரது மகள் தாமினியிடம் உதவி கமிஷனர் சியாமளா தேவி 4 மணி நேரம் விசாரணை நடத்தினார். அப்போது சேரன் தன் மகளிடம், வீட்டுக்கு வா என்று அழைத்தார். அதற்கு தாமினி, காதலனுடன் என்னை சேர்த்து வைப்பதாக கூறினால் மட்டுமே வருவேன். வாழ்ந்தால் சந்துருவுடன் தான் வாழ்வேன். இல்லை என்றால் இறந்து விடுவேன் என்று சேரனிடம் கூறினார். அதற்கு சேரன் மற்றும் அவரது மனைவி செல்வராணி சம்மதம் தெரிவிக்காததால் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஸ்டேஷனில் பரபரப்பு நிலவியது. பின்னர் தாமினி,நான் தந்தையுடன் செல்ல மாட்டேன் என்று உதவி கமிஷனரிடம் தெரிவித்தார். இதையடுத்து தாமினியின் விருப்பப்படி காதலனின் தாய் மற்றும் சகோதரியுடன் அனுப்பி வைக்கப்பட்டார்.
இன்று காலை 10 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வரவேண்டும் என்று மூவரிடமும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சேரனின் மனைவி செல்வராணி நேற்று நள்ளிரவு 1 மணிக்கு ஆர்.ஏ.புரத்தில் உள்ள மருத்துவமனையில் திடீரென சேர்க்கப்பட்டார். அவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் இன்று காலை மீண்டும் தாமினியிடம் விசாரணை நடந்தது. தாமினியின் காதலன் சந்துரு, வெளியூரில் இருப்பதாக கூறப்படுகிறது. அவரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட பிறகு, இந்த வழக்கில், உரிய முடிவு எடுக்க இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.