திருக்கோவிலூர்:திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்ட நல்லூரில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிதியளிப்பு கூட்டம் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு தேசிய நிர்வாக குழு உறுப்பினர் நல்லக்கண்ணு, மதிய உணவுக்காக 3 மணிக்கு திருக்கோவிலூர் சந்தைப்பேட்டை யில் உள்ள பயணியர் விடுதிக்கு சென்றார். அங்குள்ள 2 அறைகளையும், கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட கார்களில் வந்த 30 பேர் கும்பல் ஆக்கிரமித்து, மது மற்றும் பிரியாணி விருந்து நடத்தி கொண்டிருந்தனர்.
அதை பார்த்து முகம் சுளித்த நல்லக்கண்ணு வந்த வேகத்தில் திரும்பினார். இதனால் ஆத்திரம் அடைந்த கட்சி நிர்வாகிகள், நெடுஞ்சாலை துறை அலுவலகம் சென்றனர். அங்கிருந்த அதிகாரிகளிடம், ‘கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு வருகிறார். அவர் ஓய்வெடுக்க அறை ஒதுக்கி தருவதாக ஒப்புக் கொண்டு விட்டு, 2 அறைகளையும் மது குடித்து ஆட்டம் போடும் கும்பலுக்கு ஒதுக்கி உள்ளீர்கள். இதனால் கட்சி மூத்த தலைவர் ஓய்வெடுக்காமலும், மதிய உணவும் சாப்பிடாமலும் சென்று விட்டார். இது என்ன நியாயம்’ என்று கேட்டனர்.
அதற்கு அதிகாரிகள் பதில் கூற முடியாமல் திணறினர். தகவல் அறிந்த சப்&இன்ஸ்பெக்டர் முரளி, உளவுப் பிரிவு சப்&இன்ஸ்பெக்டர் பூங்குன்றன் ஆகியோர் நெடுஞ்சாலை துறை அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி விட்டு போலீசாரும், நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும், பயணியர் விடுதிக்கு சென்றனர். அங்கு நடந்த சம்பவங்கள் பற்றி விசாரணை நடத்தினர். பின்னர், பயணியர் விடுதியில் மது, பிரியாணி விருந்து நடத்த அனுமதி அளித்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கட்சி நிர்வாகிகளிடம் அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பின் அவர்கள் கலைந்து சென்றனர்.