8 ஆண்டுக்கு பின் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஒகேனக்கல்லில் குளிக்க தடை
ஒகேனக்கல்:கர்நாடகா மாநிலத்தில் தொடர்ந்து மழை பெய்வதால் காவிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு ஒரு லட்சத்து 5 ஆயிரம் கன அடியாக நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அனைத்து அருவிகளும் நீரில் மூழ்கின.இன்று ஆடி 18 என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ள நிலையில் நீர்வரத்து அதிகரிப்பால் தொடர்ந்து இன்று 14 வது நாளாக ஒகேனக்கல்லில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
கர்நாடகா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகள் முழு கொள்ளளவை எட்டின. அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் ஒரு லட்சம் கன அடியாக வந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. நேற்றைய நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு மதியம் 3 மணிக்கு விநாடிக்கு 60 ஆயிரம் கன அடியாக வந்த நீர்வரத்து இன்று காலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது.
காலை 9 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு ஒரு லட்சத்து 5 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஐவர்பாணி, சினிபால்ஸ், பெரியபாணி அருவிகள் இருந்த இடமே தெரியாத அளவிற்கு நீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடுகிறது. பாறைகள் அனைத்தும் நீரில் மூழ்கின. கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கலெக்டர் விவேகானந்தன் தலைமையில் வருவாய் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.