கரூர்:கரூரில் விதிமுறை மீறி சாய ஆலைகள் இயங்குவதால், விவசாயமும் நிலத்தடி நீரும் கெட்டுவிட்டதாக விவசாயிகள் கண்ணீருடன் புகார் கூறுகின்றனர்.கரூர் பகுதியில் 500 சாய ஆலைகள் செயல்பட்டன. கழிவுநீர் சுத்திகரிக்காமல் வெளியேற்றப்படுவதால், நிலத்தடி நீர் பாதிப்பதாக விவசாயிகள் வழக்கு தொடர்ந்தனர். அதன்பின், சாய ஆலை கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்ற வேண்டும். இதற்கு ஆர்.ஓ சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். சுத்திகரிப்பு நிலையம் இல்லாத ஆலைகளை மூடிவிட வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த 2011ம் ஆண்டு அனைத்து சாய ஆலைகளும் மூடப்பட்டன.
அதன்பின், ஆர்.ஓ பிளான்ட் அமைத்த ஆலைகளுக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்தது. எனினும் பல ஆலைகள் சுத்திகரிப்பு நிலையம் அமைக்காமல் இயங்குவதாக விவசாயிகள் புகார் கூறி வருகின்றனர். இதுகுறித்து அமராவதி சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க பொதுச் செயலாளர் தென்னரசு கூறுகையில்,ஆர்ஓ பிளான்ட் அமைக்காமல் பல ஆலைகள் இயங்கி கொண்டுதான் உள்ளன. இதுதொடர்பாக புகார் அளித்தால், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இடத்தை விவசாயிகளே வந்து காட்ட வேண்டும் என்று கூறுகின்றனர். இவர்கள் சீல் வைத்தாலும், உடனடியாக வேறு இடங்களில் சாய ஆலைகள் நடப்பது தொடர்கிறது. ரகசியமாக விதிமுறை மீறி இயங்கும் ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால், நிலத்தடி நீர் முழுமையாக கெட்டுவிடும். விவசாயம் கெட்டுவிட்டது. தண்ணீரும் விஷமாகி வருகிறது என்றார்.
சாய ஆலை உரிமையாளர்கள் தரப்பில் விசாரித்த போது, ‘விதிமுறை மீறி ஆலைகளை இயக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததால், முறைப்படி இயங்கும் ஆலைகளுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது. நிலத்தடி நீர் பாதிக்க கூடாது என்பதில் நாங்கள் அக்கறையுடன்தான் செயல்படுகிறோம்Õ என்கின்றனர்.
அதிகாரிகள் கூறுகையில்,ஆர்.ஓ பிளான்ட் அமைத்து ஜீரோ டிஸ்சார்ஜ் முறையில்தான் சாய ஆலைகளை இயக்க வேண்டும். சீல் வைத்த பின்னும், சாய ஆலைகள் இயங்குவது கண்டறியப்பட்டால், குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு காவல் துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்Õ என்றனர்.