சாதாரண விஷயங்களுக்கு எல்லாம் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டுவது நடக்கிறது. இது ஒரு வகையான நோய். இப்படி மிரட்டுபவர்கள் கடைசியில் அவர்கள் சொன்னது போலவே ஏதாவது ஒரு வகையில் தற்கொலை செய்து கொண்டுதான் சாகிறார்கள். தம்பியின் திருமண அழைப்பிதழில் தன் கணவர் பெயரை போடவில்லை என்று பெற்றோர் மீது மகளுக்கு கோபம். இதனால் ஏற்பட்ட தகராறில் அவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற கணவரும் தீயில் கருகி பலியானார்.
திருவள்ளூர் பெரியகுப்பத்தை சேர்ந்தவர் ஜெயகுமார். மனைவி சுமதி. இருவரும் காதலித்து, 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். காதல் திருமணம் செய்து கொண்டதால் சுமதியிடம் அவரது பெற்றோர் 10 ஆண்டுகளாக பேசாமல் இருந்தனர். சில வருடங்களுக்கு முன்பு சமாதானம் அடைந்து மகள் மற்றும் பேரக் குழந்தைகளிடம் பேச ஆரம்பித்தனர். இந்நிலையில், சுமதியின் தம்பிக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. திருமண அழைப்பிதழில் ஜெயகுமார் பெயரை போடவில்லை. பெற்றோரிடம், ‘என் கணவர் பெயரை ஏன் அழைப்பிதழில் போடவில்லை’ என்று கேட்டுள்ளார். ‘என் கணவர் பெயரை போடாமல் பத்திரிகையை கொடுத்தால் தற்கொலை செய்து கொள்வேன்’ என்று கூறிவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். கணவரிடம் நடந்ததை கூறி அழுதுள்ளார். அவரை ஜெயகுமார் சமாதானம் செய்தார். மறுநாள் அதிகாலை 2 மணியளவில் படுக்கையில் இருந்து எழுந்த சுமதி, திடீரென சமையல் அறைக்கு சென்று மண்ணெண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அலறல் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த ஜெயகுமார், மனைவியை காப்பாற்ற போராடினார். அவரது உடலிலும் தீக்காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து இருவரையும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் இறந்தனர்.
கணவர் பெயரை பத்திரிகையில் போடாதது அவமானம் என நினைத்து தீக்குளித்திருக்கிறார். ஆனால் இவரே 15 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்திருக்கிறார். அதை சாதாரணமாக நினைத்தவர், பெயர் போடாததை பெரிதாக நினைத்தது ஆச்சரியமாக இருக்கிறது. கணவனின் மானத்தை காப்பாற்ற இவர் தீக்குளிக்க, இவரை காப்பாற்ற அவரும் காயமடைந்து கடைசியில் இருவருமே இறந்து போயிருக்கிறார்கள். வறட்டு கவுரவம் இரண்டு உயிர்களை பறித்து விட்டது.