அரசியல்வாதியை மீட்கும் போராட்டத்தில் தலிபான் தீவிரவாதிகள் 60 பேர் சுட்டு கொலை 22 போலீசாரும் பலி
ஜலாலாபாத்:ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கடத்தி சென்ற அரசியல்வாதியை மீட்கும் போது ஏற்பட்ட மோதலில் 60 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த மோதலில் 22 போலீசாரும் பலியாயினர்.ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள நங்கஹார் மாகாணத்தில் ஷேர்சாத் மாவட்டத்தில் அரசியல்வாதி ஒருவரை தலிபான் தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்களுக்கு துணையாக பாதுகாப்பு படையினரும் அங்கு சென்றனர். இதுகுறித்து மாகாண பாதுகாப்பு படை அதிகாரி மாஷம்கான் கூறுகையில், அரசியல்வாதியை கடத்தி சென்ற தகவல் அறிந்து பாதுகாப்பு படையின் உதவியோடு போலீசார் அங்கு சென்றனர்.
தலிபான் தீவிரவாதிகளிடம் சிக்கியிருந்த அரசியல்வாதியை மீட்டு கொண்டு வந்தனர். அப்போது பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. பல மணி நேரம் நடந்த துப்பாக்கி சண்டையில் தலிபான் தீவிரவாதிகள் 60 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த மோதலில் 22 பாதுகாப்பு படையினரும் பலியாயினர். அரசியல்வாதியை மீட்க சென்ற போலீசாரின் வாகனங்களை நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் சூழ்ந்து கொண்டு ஆயுதங்களால் தாக்குதல் நடத்தினர் என்றார். இந்த சம்பவம் கிழக்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.