மண்ணை விற்று பணம் சம்பாதிப்பவர்களுக்கு மனித உயிர்களை பற்றி அக்கறை இருப்பதில்லை. ஏரியில் மண் அள்ள வாய்ப்பு கிடைத்தால், இஷ்டத்துக்கு குழி பறித்து விடுகிறார்கள். அப்படி தோண்டிய குழியில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 அப்பாவி சிறுவர்கள் பலியாகி விட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்துள்ளது கல்யாணமேடு கிராமம். இங்கு வசிப்பவர்கள் நடராஜன் - காமாட்சி தம்பதி. கூலித் தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வருகின்றனர். இவர்களது மூத்த மகள் லதா (13) ஏழாம் வகுப்பும் இளைய மகள் கீதா (11) ஐந்தாம் வகுப்பும் படித்து வந்தனர். 9 வயதான மகன் திருமலை, நான்காம் வகுப்பு படித்துள்ளான். வீட்டில் பாத்ரூம் வசதியெல்லாம் கிடையாது. குளிப்பதற்கு அருகில் உள்ள வேடப்பாளையம் ஏரிக்குதான் செல்ல வேண்டும். நேற்று காலை நடராஜனின் குழந்தைகள், ஏரியில் குளிக்க சென்றனர். ஒரு பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் இறங்கினர். ஆழமான பள்ளம் என்பதால் நீரில் மூழ்கி தத்தளித்தனர். அவர்களது கூக்குரல் யாருக்கும் கேட்கவில்லை. தற்செயலாக அங்கு வந்த ஒரு சிறுவன், நீரில் 3 பேர் தத்தளிப்பதை பார்த்து ஊருக்குள் சென்று தகவலை கூறினான். அவர்கள் வருவதற்குள் 3 பேரும் நீரில் மூழ்கி இறந்துவிட்டனர். பெற்றோரும் பொதுமக்களும் ஏரியில் இறங்கி தேடினர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு சேற்றில் சிக்கியிருந்த 3 பேரின் உடல்களையும் மீட்டனர். இந்த சம்பவத்தால் கிராமமே சோகத்தில் மூழ்கிவிட்டது. பிள்ளைகளை பறிகொடுத்துவிட்டு கதறும் பெற்றோரை யார் தேற்றுவது?
சிறுவர்களை பலி வாங்கிய ஏரியில் சவுடு மண் அள்ள டெண்டர் விட்டுள்ளனர். ஏரியில் மண் அள்ள அரசு பல விதிமுறைகளை வகுத்துள்ளது. ஒரே இடத்தில் மண் அள்ளக் கூடாது. குறிப்பிட்ட அடிக்கு கீழே தோண்ட கூடாது என்பதெல்லாம் முக்கியமான விதிமுறைகள். அவை எல்லாம் ஏட்டளவில் மட்டுமே உள்ளன. டெண்டர் எடுப்பவர்கள் பணம் பார்க்கும் ஆசையில், இஷ்டத்துக்கு மண்ணை அள்ளி, ஆங்காங்கே மரண குழிகளை ஏற்படுத்தி விடுகின்றனர். அவற்றில் தண்ணீர் தேங்குவதால் விவரம் தெரியாமல் பலர் குளிக்க சென்று உயிரை இழக்கின்றனர். இந்த இழப்புகளுக்கு யார் பொறுப்பேற்பது? மண் அள்ளுவதில் அரசு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டால் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காது. மண்ணுக்கும் பொன்னுக்கும் மவுசு கூடி வரும் நிலையில், விலைமதிப்பற்ற மனித உயிர்கள் மலிவாகிவிட்டதோ?