திருமணம் ஆன பிறகு மாப்பிள்ளை குடிகாரன் என தெரிந்தாலே, குடும்பத்தில் குழப்பம் வந்து விடும். தினமும் குடிச்சுட்டு வந்து தகராறு பண்றானே... தப்பு பண்ணிட்டமே... என துடித்துப் போவார்கள் பெற்றோர். திருமணத்துக்கு முன்பே இந்த விஷயம் தெரிய வந்தால் என்ன செய்வார்கள்? உடனே திருமணத்தை நிறுத்தி விடுவார்கள். அப்படித்தான் செய்திருக்கிறார்கள் பெண்ணின் பெற்றோர். ஆனால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்று போனதால் மனம் வேதனையடைந்த போலீஸ்கார மாப்பிள்ளை தூக்கு போட்டு தற்கொலை செய்து விட்டார்.
நாமக்கல் கொசவம்பட்டி ரோஜா நகரை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவரது மகன் பாலுசாமி. அசாம் மாநிலத்தில் மத்திய அரசின் ரிசர்வ் போலீஸ் படையில் போலீஸ்காரராக வேலை செய்து வந்தார். திருமணம் செய்து கொள்ள, ஒரு மாத விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். பெற்றோர் சென்னையை சேர்ந்த ஒரு பெண்ணை பார்த்து திருமணம் நிச்சயித்தனர். பாலுசாமிக்கு குடிப்பழக்கம் உண்டு. தினமும் போதையில் சென்னையில் உள்ள பெண்ணுக்கு போன் செய்து, ஆபாசமாக பேசி வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்ணின் பெற்றோர், திருமணத்தை நிறுத்தி விட்டனர். திருமணம் நின்று போனதால், வேதனை அடைந்த பாலுசாமி, கடந்த சில நாட்களாக மனவருத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் பாலுசாமி, தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தமிழகத்தில் ஏராளமான குடும்பங்கள் குடிப் பழக்கம் காரணமாக சிதைந்து வருகின்றன. தினமும் குடித்து விட்டு வந்து எல்லோருடனும் தகராறு செய்தால் எந்த மனைவிதான் பொறுத்துக் கொள்வார். சம்பாதிக்கும் பணத்தை குடித்தே செலவு செய்து விட்டு வீட்டுச் செலவுக்கு பணம் தராமல் இருந்தால் எப்படி ஆக்கிப் பொங்கி சாப்பிட முடியும்? இதில் கறிக் குழம்பு வைக்கவில்லை, மீ¢ன் குழம்பு வைக்கவில்லை என மனைவியை போட்டு அடிக்கும் குடிகாரர்களும் இருக்கிறார்கள். இப்படி நாளும் பொழுதும் அடிதடியில் கழிந்தால் குடும்பம் எப்படி நடத்த முடியும். குழந்தைகள் எப்படி படிப்பார்கள். திருமணத்துக்கு முன்பே குடித்து விட்டு ஆபாசமாக பேசியவர், அதன்பிறகு என்னவெல்லாம் செய்திருப்பார். எந்த சாமி புண்ணியமோ, நல்லவேளையாக ஒரு பெண்ணின் வாழ்க்கை தப்பியது. திருமணம் நிச்சயம் முடிந்து விட்டதே என தயங்காமல் திருமணத்தை நிறுத்தி விட்டனர். இந்த விஷயத்தில் பெண்ணின் பெற்றோர் பாராட்டுக்குரியவர்கள்.