பெற்றோருக்கு மகனை விடவும் மகள் மீது பாசம் அதிகம். அதனால்தான் பெண் பிள்ளைகளின் ஒவ்வொரு விஷயத்திலும் தலையிட்டு கவனமாக பார்த்துக் கொள்வார்கள். திருமண வயது வந்தவுடன் மாப்பிள்ளை பார்க்கும்போது, காலம் முழுவதும் மகள் கண் கலங்காமல் இருக்க வேண்டுமே என தூக்கத்தை தொலைத்து கவலைப்படுவார்கள். அவ்வளவு பாசம் வைத்திருக்கும் பெற்றோரை, உதாசீனப்படுத்திவிட்டு, காதலனைத்தான் கைப்பிடிப்பேன் என மகள் பிடிவாதமாக இருந்திருக்கிறார். வேதனையடைந்த பெற்றோர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
ஆந்திர மாநிலம் மெகபூப்நகர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜாராம். ஐதராபாத்தில் மளிகை கடை நடத்தி வந்தார். இவரது மனைவி வசந்தா. இவர்களுக்கு ஒரு மகனும், 23 வயதில் மகளும் உள்ளனர். மகள் ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் சாப்ட்வேர் கம்பெனியில் இன்ஜினியராக உள்ளார். மகன் பி.டெக் படித்து வருகிறார். கடந்த ஆண்டு பேஸ்புக் மூலம் இளம்பெண்ணுக்கு, கிழக்கு கோதாவரியை சேர்ந்த ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதையறிந்த இளம்பெண்ணின் பெற்றோர், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இளம்பெண் Ôகாதலனைத் தான் திருமணம் செய்து கொள்வேன். இல்லை எனில் தற்கொலை செய்து கொள்வேன்Õ என மிரட்டியுள்ளார். வேதனை அடைந்த பெற்றோர் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். போலீசார், சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் சோதனை செய்த போது அவர்கள் எழுதி வைத்திருந்த ஒரு கடிதம் கிடைத்தது. அதில், Ôமகளை காதலித்தவனுக்கு திருமணம் செய்து வைக்க மனமில்லை. அதே நேரத்தில் மகள் தற்கொலையை பார்க்க எங்களுக்கு தைரியமில்லை. இதனால்தான் நாங்கள் இந்த முடிவை எடுத்தோம்Õ என கடிதத்தில் எழுதியிருந்தனர்.
பெற்று வளர்த்த பெற்றோருக்கு தெரியாதா, பிள்ளைக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று. இது ஏன் பிள்ளைகளுக்கு தெரியாமல் போகிறது. பெற்றோர் எப்போதும் நல்லதுதான் சொல்வார்கள், நல்லதுதானே செய்வார்கள். என்ன தெரியும் என்ற தைரியத்தில், அவர்களை நம்பாமல் வாழ்க்கைத் துணையை இவர்களே தேர்ந்தெடுக்க நினைக்கிறார்கள்? பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு என்பது இதுதான் போலிருக்கிறது.