குழந்தையாக இருந்த பிறகுதான் எல்லோரும் வளர்ந்து பெரியவர்களாகிறோம். ஆனால் குழந்தையாக இருக்கும்போது இருந்த பெருந்தன்மை, மறப்போம்&மன்னிப்போம் என்ற எண்ணம், பெரிய மனது எல்லாமே வளர வளர காணாமல் போய் விடுகிறது. ஈகோ என்ற குறுகிய வட்டத்தில் சிக்கிக் கொள்கிறோம். அப்போது எது நல்லது, எது கெட்டது என்பது தெரியாமல் போய் விடுகிறது. சண்டையில் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்ற மனைவியிடம் இருந்து 3 வயது குழந்தையை தூக்கிக் கொண்டு வந்து விட்டார் கணவன். போலீஸ் மூலம் தாயுடன் சேர்ந்த குழந்தை பாசமுடன் முத்தமழை பொழிந்துள்ளது. தந்தையையும் தாயை பார்க்கும்படி அழைத்துள்ளது. ஆனால் கோபம் தீராத தந்தை மறுத்து விட்டார்.
கும்பகோணம் அடுத்த சாத்தனூரை சேர்ந்த விவசாயி சரவணன். மனைவி லதா. 3 வயதில் நிவேதா, 6 மாத குழந்தை சண்முகப்பிரியா என 2 பெண் குழந்தைகள். லதாவை, சரவணன் குடும்பத்தினர் துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. தனிக்குடித்தனத்துக்கு லதா வற்புறுத்தினார். ஆனால் சரவணன் மறுத்து விட்டார். அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. 3 மாதங்களுக்கு முன் கோபித்து கொண்டு தாய் வீடான நாகை மாவட்டம் குத்தாலத்துக்கு குழந்தைகளுடன் லதா சென்றார். சில நாட்கள் கழித்து குத்தாலம் சென்ற சரவணன், மூத்த மகள் நிவேதாவை வலுக்கட்டாயமாக தன்னுடன் அழைத்துச் சென்று விட்டார். மகளை மீட்டுத் தர வேண்டும் என போலீசில் லதா புகார் செய்தார். கும்பகோணத்தில் குறைதீர் கூட்டம் நடந்தது.
அங்கு வந்த லதா, போலீஸ் எஸ்பி தர்மராஜனிடம் புகார் செய்தார். குழந்தையுடன் சரவணனை எஸ்பி வரவழைத்தார். 3 மாதம் கழித்து தாயை பார்த்த மகிழ்ச்சியில் குழந்தை நிவேதா ஓடிச் சென்று முத்தமழை பொழிந்தாள். குட்டித் தங்கையையும் கட்டித் தழுவினாள். ‘அம்மாவை வந்து பாருங்கள் என நிவேதா அழைத்ததை சரவணன் நிராகரித்தார். மகள் கிடைத்த மகிழ்ச்சியில், கணவன் வேண்டாம், குழந்தைகளே போதும் என்று கூறி கிளம்பி சென்றார் லதா.பரஸ்பரம் விட்டுக் கொடுத்து போனால்தான் குடும்பம் நடத்த முடியும். ஈகோ பார்த்தால் மனைவி, குழந்தைகளுடன் சேர்ந்து வாழ முடியாது. இதை ஆணும், பெண்ணும் புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொண்டால் இல்லறம் சிறக்கும். இல்லாவிட்டால் கசக்கும்.