எந்த ஒரு விஷயத்தையும் ஜவ்வாக இழுத்துக் கொண்டே போகக் கூடாது. அலுத்து விடும். காதலும் அப்படித்தான். அதிகம் போனால் ஓராண்டு அல்லது 2 ஆண்டு காதலிக்கலாம். அதன்பின் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் பிரச்னை வராது. அப்படி இல்லாமல் ஒரு ஜோடி 10 ஆண்டுகளாக காதலித்திருக்கிறார்கள். காதலனுக்கு அலுத்து, சலித்து விட்டதோ என்னவோ... காதலியை கைவிட்டு இன்னொருவரை கரம் பிடிக்க ஏற்பாடு செய்திருக்கிறார். பொங்கி எழுந்த காதலி போலீசில் புகார் செய்ய காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த வெள்ளாம்பெரம்பூரை சேர்ந்தவர் மேதா. அதே ஊரை சேர்ந்தவர் ரமேஷ். விவசாயி. ரமேஷும், மேதாவும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். மேதா, தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அவ்வப்போது ரமேஷை வற்புறுத்தி வந்தார். தங்கையின் திருமணம் முடிந்ததும், உன்னை திருமணம் செய்துகொள்கிறேன் என ரமேஷ், மேதாவிடம் வாக்குறுதி கொடுத்தார். இந்நிலையில் எப்போது திருமணம் செய்து கொள்வாய் என கடந்த மாதம் மேதா கேட்டார். அதிலிருந்து மேதாவுடனான தொடர்பை ரமேஷ் துண்டித்துக்கொண்டார். இதனால் மேதா அதிர்ச்சியடைந்தார். திருமணம் செய்து கொள்ளாமல் காதலன் ஏமாற்றுவதாக திருவையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து விட்டார் காதலி. ரமேஷும், நானும் 10 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். சில நாட்களுக்கு முன் ரமேஷுக்கும், இன்னொரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து ரமேஷிடம் கேட்டேன். அப்போது ரமேஷ், அவரது தாய் மணிமேகலை, உறவினர், சகோதரிகள் ஆகியோர் அரிவாளை காட்டி என்னை வெட்டி விடுவதாக மிரட்டினர் என புகாரில் மேதா தெரிவித்திருந்தார். போலீசார் வழக்குப்பதிந்து, ரமேஷை கைது செய்தனர். அவரது தாய், சகோதரிகள், உறவினரை தேடி வருகின்றனர்.
ஆண்கள் எல்லோரும் கெட்டவர்கள் என சொல்ல முடியாது. ஆனால் காதலிக்கும் ஆண்களில் பலர் வாய்ப்பு கிடைத்தால் காதலியை கழற்றி விடத் தயாராய் இருப்பவர்கள்தான். கேட்டால் வீட்டில் பெற்றோர் பிரஷர் என்பார்கள். பெண்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்த நேரத்திலும் ஏமாந்து விடக் கூடாது. பிரிய வேண்டிய சூழல் வந்தாலும் கூட எந்த பாதிப்பும் இல்லாத வகையில்தான் காதல் வலையில் இருந்து வெளியே வர வேண்டும்.