சோழிங்கநல்லூரில் பரபரப்பு சம்பவம் பூட்டிய வீட்டில் சடலம் வாலிபர் அடித்து கொலையா? 6 நாளாக சாப்பாடு இல்லாமல் தவித்த தந்தை மீட்பு
துரைப்பாக்கம்:சோழிங்கநல்லூரில் பூட்டப்பட்ட வீட்டில் கடந்த 6 நாட்களுக்கு முன் இறந்த வாலிபர் உடலை போலீசார் கைப்பற்றி உள்ளனர். சாப்பாடு கிடைக்காமல் உயிருக்கு போராடிய தந்தையை மீட்டனர். சென்னை சோழிங்கநல்லூர் கிராம நெடுஞ்சாலையில் உள்ள வ.உ.சி. தெருவில் வசிப்பவர் புருஷோத்தமன் (83). உடல் நிலைமை பாதிக்கப்பட்ட இவரால் நடக்க முடியாது. இவரின் மகன் மகேந்திரன் (35). லைனராக பணியாற்றினார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. வேலை இல்லாத சமயத்தில் நண்பர்களுடன் சேர்ந்து குடித்து ஊர்சுற்றி வந்திருக்கிறார். கீழ் வீட்டை வட மாநில இளைஞர்களுக்கு வாடகைக்கு விட்டுவிட்டு மேல் தளத்தில் உள்ள குடிசையில் அப்பாவும் மகனும் வசித்துவந்தனர். மாதந் தோறும் வாடகை பணத்தை வாங்கி மகேந்திரன் குடித்தே செலவு செய்துள்ளார்.
கடந்த 14ம் தேதி மகேந்திரன் வீட்டுக்கு திருவண்ணாமலையில் இருந்து நண்பர்கள் வந்துள்ளனர். மது அருந்தி ஜாலியாக இருந்திருக்கிறார்கள். நண்பர்கள் சென்றபிறகு மகேந்திரன் நடமாட்டம் இல்லை. இதுபற்றி அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் விசாரித்துள்ளனர்.இந்நிலையில், நேற்று மாலை மகேந்திரன் வீட்டில் இருந்து பயங்கரமாக துர்நாற்றம் வீசியது. அந்த பகுதியினர் செம்மஞ்சேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்தனர். கதவை உடைத்து உள்ளே போய் பார்த்தனர். அங்கு மகேந்திரன் உடல் அழுகிய நிலையில் தரையில் கிடந்தது. அருகே கட்டிலில் புருஷோத்தமன் அரைகுறை மயக்கத்தில் கிடந்தார். உடனடியாக புருஷோத்தமனுக்கு தண்ணீர் கொடுத்து மயக்கம் தெளியவைத்தனர். பின் போலீசார் அவருக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மகேந்திரன் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குடிபோதையில் நாக்கு வறண்டு இறந்தாரா, நண்பர்கள் இடையே நடந்த சண்டையில் நண்பர்கள் அடித்துக் கொன்றுவிட்டு தப்பி விட்டார்களா என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். இந்த சம்பவம் சோழிங்கநல்லூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.