சேலம்:பா.ஜ. மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ், சேலத்தில் நேற்றிரவு மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை கடைகள் அடைக்கப்பட்டன. சிலர் பஸ்கள் மீது கல்வீசி தாக்கியுள்ளனர். சேலம், ஈரோடு, கோவை, திருப்பூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார் 6 தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். சேலம் மரவனேரி முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஆடிட்டர் ரமேஷ் (52). பா.ஜ., மாநில பொதுச் செயலாளராக இருந்து வந்தார். மனைவி சுபா. இவர்களுக்கு சுமிதா என்ற மகள் உள்ளார். வீட்டுக்கு அருகே உள்ள குறுக்கு தெருவில், ரமேஷின் ஆடிட்டிங் அலுவலகம் செயல்பட்டு வந்தது. நேற்றிரவு சாப்பிட்டு விட்டு, 9.30 மணியளவில் அலுவலகத்துக்கு ஸ்கூட்டரில் சென்றார். அலுவலக கதவை திறக்க முயன்றபோது, பின்னால் வந்த மர்ம கும்பல், திடீரென அவரை சரமாரியாக வெட்டியது. ரமேஷின் தலை, கழுத்து, மார்பு, கை உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டு விழுந்துள்ளது. ரத்த வெள்ளத்தில் அவர் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார். பின்னர் மர்ம கும்பல் தப்பியோடி விட்டது.
ரமேஷ் கொல்லப்பட்ட தகவல் பரவியதும் 500&க்கும் மேற்பட்ட பா.ஜ.வினர் அங்கு திரண்டனர். சேலம் சரக டிஐஜி சஞ்சய் குமார், மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் பாபு, பிரபாகரன், எஸ்பி சக்திவேல் ஆகியோர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். ரமேஷின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தினமும் அலுவலக பணிகளை முடித்த பிறகு அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ரமேஷ் ஆலோசனை நடத்துவார். நேற்று நிர்வாகிகள் யாரும் வரவில்லை. இதனால், அவர் தனியாக இருப்பது தெரிந்தே மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
வேலூரில் கடந்த 1&ம் தேதி இந்து முன்னணி மாநில அமைப்பாளர் வெள்ளையப்பன், மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரும் ஆடிட்டர் ரமேசும் இந்துமத கொள்கைகளை பரப்புவதில் தீவிரமாக செயல்பட்டு வந்தனர். வெள்ளையப்பனை தொடர்ந்து ரமேஷ் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. தீவிரவாத கும்பலுக்கு இதில் தொடர்பு இருக்குமோ என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் சூரியமூர்த்தி, கண்ணன், வெங்கடேசன், சபியுல்லா, செந்தில்குமார், கபிலன் ஆகியோர் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சமீபகாலமாக ரமேஷுடன் செல்போனில் அடிக்கடி பேசியவர்கள் யார், சமீபத்தில் கட்சி நிகழ்ச்சிகளில் அவர் பேசிய பேச்சு அடங்கிய டேப் ஆதாரங்கள் குறித்து தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.
ரமேஷ் கொலையை கண்டித்தும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் மரவனேரி ரோட்டில் நேற்று நள்ளிரவு 12 மணி வரை பா.ஜ.வினர் மறியலில் ஈடுபட்டனர். பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலைய பகுதிகளிலும் சாலை மறியல் நடந்தது. இதனால் அந்த பகுதியில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சில இடங்களில் பஸ்கள் மீது கல்வீசி தாக்கப்பட்டன.சேலம் மாநகரில் இன்று காலை முதல் அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்படுகின்றன. பெரும்பாலான தனியார் பஸ்கள் ஓடவில்லை. டவுன் பகுதிகளில் பரவலாக கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய கோயில்கள், மசூதிகள் மற்றும் பா.ஜ. நிர்வாகிகள் வீடு, கலெக்டர் அலுவலகம் ஆகிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நகரில் பதற்றம் நிலவுவதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஆடிட்டர் ரமேஷ் கொலையை கண்டித்து, திருப்பூர் மாவட்ட பாஜ சார்பில் இன்று பந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. திருப்பூர் டவுன் பகுதி, தாராபுரம் ரோடு, காங்கயம் ரோடு, பல்லடம் ரோடு, ரயில் நிலையம் ஆகிய இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சில பனியன் கம்பெனிகளும் மூடப்பட்டிருந்தன. ஓட்டல்கள், வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டிருந்தன. பெரும்பாலான தனியார் பஸ்கள் ஓடவில்லை. அனுப்பர்பாளையம், பெருமாநல்லூர், குன்னத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. அப்பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஈரோடு, கோவை மாவட்டங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி & பொம்மிடி சாலையில் இன்று காலை அரசு பஸ் மீது ஒருவர் கல்வீசி தாக்கினார். இதில் பஸ்சின் கண்ணாடி உடைந்து சிதறியது. கல்வீசிய நபரை பயணிகள் உதவியுடன் டிரைவர் பிடித்து போலீசில் ஒப்படைத்தார். பிடிபட்டவர் பொம்மிடி துரிஞ்சிப்பட்டியை சேர்ந்த பா.ஜ. மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் முருகன் (35) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
நாளை மறுநாள் பந்த் தமிழக பா.ஜ. அழைப்பு
தமிழக பா.ஜ. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், இன்று காலை சேலம் வந்தார். ரமேஷின் வீட்டுக்கு சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியது:தமிழகத்தில் இந்து இயக்க தலைவர்கள் பயங்கரவாதிகளால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். இச்சம்பவங்களில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும். வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் இதுபோன்ற பயங்கர சம்பவங்கள் நடந்து வருகிறது. இது, தமிழக அரசுக்கு பெருத்த அவமானம்.
கொலைக்கான திட்டங்கள் சிறைச்சாலைகளில் தீட்டப்படுவதாகவும், கொலையாளிகள் அரசியல் கட்சி தலைவர்களின் ஆதரவுடன் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஆடிட்டர் ரமேஷ் படுகொலையை கண்டித்து சேலம், நாமக்கல், திருப்பூரில் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் (22&ம் தேதி) முழு கடையடைப்பு போராட்டம் நடத்த பா.ஜ. அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு அதிமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு தர வேண்டும்.இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். க்யூ பிராஞ்ச் விசாரணை
சில மாதங்களுக்கு முன்பு வேலூரில் பா.ஜ. மருத்துவ அணி செயலாளர் டாக்டர் அரவிந்த் ரெட்டி, மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். கடந்த 1&ம் தேதி வேலூரில் இந்து முன்னணி இயக்க மாநில அமைப்பாளர் வெள்ளையப்பனும் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அடுத்த ஒரு வாரத்தில் பரமக்குடி பா.ஜ. கவுன்சிலர் முருகன் கொல்லப்பட்டார்.
இப்போது சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்து இயக்க தலைவர்களை குறி வைத்து ஒரு கும்பல் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி வருவதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் உள்ளூர் போலீசாருடன் இணைந்து க்யூ பிராஞ்ச் போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.