உத்தரகண்ட் மாநிலத்தை சீரமைக்க 13 ஆயிரம் கோடி நிதி வேண்டும் மத்திய அரசுக்கு கோரிக்கை
டேராடூன்:மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தரகண்ட் மாநிலத்தை சீரமைக்க ரூ.13 ஆயிரம் கோடி நிதி உதவி தேவை என மத்திய அரசிடம் மாநில அரசு கோரிக்கை வைத்துள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த மாதம் பெய்த கன மழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் பெருத்த சேதமடைந்தன. சுற்றுலா தலங்களில் செய்யப்பட்டிருந்த கட்டமைப்பு வசதிகள் வெள்ளத்தில் நாசமாயின. நிலச்சரிவு காரணமாக நூற்றுக்கணக்கான பாலங்கள் மற்றும் சாலைகள் துண்டிக்கப்பட்டன. மழை வெள்ளத்தில் சிக்கி 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். நூற்றுக் கணக்கான கிராமங்கள் மக்கள் வசிக்க முடியாத அளவுக்கு பெருத்த சேதத்தை சந்தித்தன. சுற்றுலா தலங்களில் கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த ரூ.3 ஆயிரத்து 560 கோடி தேவை என மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் அம்ரிதா ராவத் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், மாநிலம் முழுவதையும் சீரமைக்க ரூ.13 ஆயிரம் கோடி தேவை என மத்திய அரசுக்கு மாநில தலைமை செயலாளர் சுபாஷ் குமார் கடிதம் எழுதியுள்ளார். வீடுகளை இழந்த மக்களுக்கு மறுவாழ்வு அளிக்க ரூ.8 ஆயிரம் கோடியும், சாலைகள் மற்றும் பாலங்களை சீரமைக்க ரூ.1500 கோடியும், சுற்றுலா தலங்களின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.3500 கோடியும் தேவை என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் உத்தரகண்ட வெள்ள சேதங்களை மதிப்பிடுவதற்காக 11 பேர் கொண்ட மத்திய குழு உத்தரகண்ட வந்துள்ளது. இந்தக்குழு மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து சேதம் குறித்து மதிப்பீடுகளை தயார் செய்துள்ளது. இந்தக் குழு இன்று தலைமை செயலர் சுபாஷ்குமாரை சந்தித்து ஆலோசனை நடத்துகிறது.