தெருவில் எச்சில் துப்ப தடை லண்டன் நகர நிர்வாகம் அதிரடி
லண்டன்:இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் தெருவோரங்களில் எச்சில் துப்ப தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் தெருவில் நடந்து செல்வோர், வாகனங்களில் செல்வோர், பூங்கா, பீச் போன்ற பொது இடங்களுக்கு செல்வோர் மற்றவர்களை பற்றி எந்த கவலையும் இல்லாமல் ‘பளிச்’ என்று எச்சிலை துப்புகின்றனர். இதனால் மற்றவர்களுக்கு ஏற்படும் சுகாதார கேடு பற்றி கவலைப்படுவதில்லை. சென்னை போன்ற நகரங்களில் பான்பராக் போன்றவை தடை செய்யப்பட்ட பின்பும் மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழைவு வாயில் உள்ளிட்ட இடங்கள் காண சகிக்க முடியாத அளவுக்கு மூலை முடுக்கெல்லாம் பான்பராக் எச்சிலை துப்பிவிட்டு செல்கின்றனர்.
எத்தனை விழிப்புணர்வு பிரசாரம் செய்தாலும் மக்கள் மனதில் மாற்றம் ஏற்படாதவரை இதுபோன்ற பழக்க வழக்கத்தை மாற்ற முடியாது. இந்நிலையில் இங்கிலாந்து செல்லும் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாட்டு மக்கள் ஆங்காங்கே எச்சில் துப்புகின்றனர். இவர்களின் நடத்தையை கட்டுப்படுத்த லண்டன் நகராட்சி நிர்வாக கவுன்சில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி உள்ளது. இதன் மூலம் பொது இடங்களில் எச்சில் துப்புவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தீர்மானம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் இது சட்டத்தில் துணை விதியாக சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.