சித்தூர்: சித்தூர் அடுத்துள்ள பலமனேர் பகுதியில் வசிக்கும் பல இளம்பெண்களுக்கு அடிக்கடி ஆபாச எஸ்எம்எஸ் வந்த வண்ணம் இருந்தது. கல்லூரி மாணவிகள், திருமணம் ஆகாத பெண்களின் செல்போனுக்கு கடந்த 3 மாதங்களாக லவ் மெசேஜ் அனுப்பி ஒருவர் டார்ச்சர் செய்து வந்தார். இதனால் பல பெண்கள் மனதளவில் பாதிப்புக்குள்ளாகி வந்தனர்.
அந்த நபர் யார்? என்று தெரியாமலும், வீட்டில் சொல்லமுடியாமலும் தவித்து வந்தனர். இந்நிலையில், அந்த மர்மநபரின் டார்ச்சர் அத்துமீறவே கல்லூரி மாணவி ஒருவர், பலமனேர் போலீசாருக்கு கடிதம் அனுப்பினார். அதன்பேரில் போலீசார் அந்த இளம்பெண் குறிப்பிட்டிருந்த செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அந்த டார்ச்சர் ஆசாமி, பலமனேர் அடுத்துள்ள கண்டாவூர் கிராமத்தை சேர்ந்த வேன் டிரைவர் தேஜா (25) என தெரியவந்தது. அவரை நேற்று முன்தினம் இரவு போலீசார் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். முதலில் ஒப்புக்கொள்ள மறுத்த தேஜா, பின்னர் போலீசாரின் நெருக்கடி விசாரணைக்கு பயந்து ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியதையும், போன் செய்ததையும் ஒப்புக் கொண்டார். சில பெண்கள் தன்னை காதலிப்பதாக கூறி ஏமாற்றிவிட்டதால், கடைகளில் ரீசார்ஜ் செய்ய வரும் இளம்பெண்களின் செல்போன் எண்களை ரகசியமாக குறித்து வைத்துக்கொண்டு அவர்களுக்கு ஆபாச எஸ்எம்எஸ்களும், இரவு நேரங்களில் போன் செய்து, Ôநீ என்னை காதலித்தே தீரவேண்டும் என்று மிரட்டியதையும் ஒப்புக் கொண்டார். இதை தொடர்ந்து போலீசார் அவரை எச்சரித்து அனுப்பினர்.