சென்னை:முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வுகள் நாளை நடக்கிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் 421 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 2881 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் புதியதாக நியமனம் செய்யப்படுகின்றனர். அவர்கள் போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நாளை நடத்துகிறது. தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில் 1 லட்சத்து 67 ஆயிரத்து 662 பேர் தகுதி உள்ளவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 57134 பேர் ஆண்கள். 1 லட்சத்து 10 ஆயிரத்து 526 பேர் பெண்கள். பார்வைத்திறன் குறைவானவர்கள் 971 பேர். மாற்று திறனாளிகள் 7535 பேர்.
மேற்கண்ட முதுநிலை பட்டதாரிகள் தேர்வு எழுதுவதற்காக 32 மாவட்டங்களில் 421 தேர்வு மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. கேள்வித்தாள் கட்டு காப்பாளர், முதன்மை தேர்வாளர் மற்றும் துறை அலுவலர்கள் என 3387 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களில் மேற்பார்வையாளர்களாக 8383 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் ஆற்காடு ரோடு ஆவிச்சி மேல்நிலைப்பள்ளி, கோட்டூர்புரம் ஏவிஎம் மேல் நிலைப்பள்ளி, அடையாறு அவ்வை ஹோம், விருகம்பாக்கம் பால லோக் பள்ளி, பெரம்பூர் டான்பாஸ்கோ, சிந்தாதிரிப்பேட்டை மேல்நிலைப்பள்ளி, எழும்பூர் டான்பாஸ்கோ மேல்நிலைப் பள்ளி, அசோக் நகர் கே.கே.நிர்மலா மேல்நிலைப்பள்ளி, நந்தனம் பாஸ்டன் மேல்நிலைப்பள்ளி, கிண்டி சென்னை மேல்நிலைப்பள்ளி உள்பட 55 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த போட்டி தேர்வில் பார்வைத் திறன் குறைவுடைய பட்டதாரிகளுக்கு கூடுதலாக அரை மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. பார்வைத் திறன் குறைவுடையோர், மாற்று திறனாளிகளுக்கு தரைத் தளங்களில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பார்வைத்திறன் குறைவானவர்களுக்கு உதவியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.