சிறையில் ரம்ஜான் நோன்பு இருக்க கைதிகளுக்கு மும்பை கோர்ட் அனுமதி
மும்பை: மகாராஷ்டிரா சிறப்பு குற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள 50 கைதிகள் சிறையில் ரம்ஜான் நோன்பு இருக்க மும்பை சிறப்பு கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. மும்பை ரயில் குண்டுவெடிப்பில் தொடர்புடைய குற்றவாளிகள் மகாராஷ்டிரா சிறப்பு குற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு அவ்வளவு எளிதில் ஜாமீன் கிடைக்காது. மேலும் சிறையிலும் இவர்களுக்கு கெடுபிடிகள் அதிகம். இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சுமார் 50 கைதிகள் ரம்ஜான் நோன்பு இருக்க சிறை நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. இவர்கள் அனைவரும் தலோஜா, ஆர்தர் ரோடு மற்றும் கல்யாண் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் சார்பாக ஐமாயித் உலமா இ மகாராஷ்டிரா என்ற தன்னார்வ அமைப்பு, மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை மும்பை சிறப்பு நீதிமன்றம் நேற்று விசாரித்து, சிறப்பு குற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள 50 கைதிகள் சிறையில் ரம்ஜான் நோன்பு இருக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இவர்கள் அனைவருக்கும் சூரிய உதயத்துக்கு முன்பு காலை உணவும், சூரியன் மறைந்த பின்னர் இரவு உணவு வழங்கவும் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் மட்டும் கைதிகளின் வீடுகளிலிருந்து உணவு கொண்டு
வந்து கொடுக்கவும் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.