இஸ்லாமாபாத்:தலிபான்கள் உள்ளிட்ட தீவிரவாதிகள் மிரட்டலுக்கு இடையில் பாகிஸ்தானில் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல் இன்று நடக்கிறது. பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி தபால் மூலம் வாக்களித்தார். பாகிஸ்தான் நாடாளுமன்றம், 4 சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று காலை தொடங்கியது. இங்குள்ள 342 நாடாளுமன்ற தொகுதிகளில், 4670 வேட்பாளர்களும், சட்டசபை தொகுதிகளில் 11 ஆயிரம் பேரும் போட்டியிடுகின்றனர். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி, முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதிபர் ஆசிப் அலி சர்தாரியின் மகன் பிலாவல் புட்டோ தலைவராக உள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சியும் களத்தில் உள்ளது.
தேர்தலில் வாக்களித்தால் கொல்லப்படுவார்கள்என்று தலிபான் உள்பட பல்வேறு தீவிரவாத அமைப்புகள் கடும் மிரட்டல் விடுத்துள்ளன. பல வேட்பாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளுக்கு பயந்து அதிபரின் மகன் பிலாவல், வெளிநாடு சென்று விட்டார். அவர் தேர்தலில் வாக்களிக்க வருவாரா என்பது சந்தேகமாக உள்ளது. பிரசாரத்தின் போது மேடை சரிந்து இம்ரான்கான் காயம் அடைந்தார். அவரும் வாக்களிப்பாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. முன்னாள் பிரதமர் யூசுப் ரசா கிலானியின் மகன் ஹைதர் தேர்தல் பிரசாரத்தின் போது கடத்தப்பட்டுள்ளார். இதனால் பதற்றம் நீடிக்கிறது.
எனினும், திட்டமிட்டமிட்டபடி இன்று வாக்கு பதிவு தொடங்கியது. பதற்றம் நிறைந்த பஞ்சாப் மகாணத்தில் 3 லட்சம் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தேர்தலில் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி தபால் ஓட்டு போட்டார். இதுகுறித்து அதிபர் அலுவலக செய்தி தொடர்பாளர் பர்கத்துல்லா பாபர் கூறுகையில், தலிபான் தீவரவாதிகள் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு நேரடியாக மிரட்டல் விடுத்துள்ளனர். முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார். எனவே, பாதுகாப்பு கருதி, அதிபர் ஆசிப் மற்றும் அவரது மகன்கள் தபால் மூலம் வாக்களித்துள்ளனர்என்றார்.