ஐபிஎல் போட்டியில் இன்று இரவு 8 மணிக்கு சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. இப்போட்டி மொகாலியில் நடக்கிறது. இரு அணிகளுக்கும் இந்த போட்டி மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. 12 போட்டிகளில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணி 7 வெற்றி பெற்று, 5ல் தோல்வி அடைந்துள்ளது. இந்த அணி 14 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. அதே சமயம் பஞ்சாப் அணி 12 போட்டிகளில் விளையாடி 5ல் வெற்றி, 7 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. இந்த அணி 10 புள்ளிகளுடன் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.
இந்த போட்டியில் சன் ரைசர்ஸ் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு நுழைய சாதகமாக அமையும். இந்த போட்டியை தவிர்த்து சன் ரைசர்ஸ் அணிக்கு மேலும் 3 போட்டிகள் உள்ளன. அதில் ஒன்று மும்பைக்கு எதிராக மும்பையில் நடைபெறும் போட்டியாகும். மற்ற 2 போட்டிகள் சொந்த மண்ணில் நடக்கிறது. இதில் ராஜஸ்தான் அணியுடனும், கொல்கத்தா அணியுடனும் மோத இருக்கிறது. இன்று நடைபெறும் போட்டி சாதகமாக அமையாவிட்டால் அடுத்த 3 போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்படும். எனவே இன்றைய போட்டியில் வெற்றி நம்பிக்கையுடன் சன் ரைசர்ஸ் களமிறங்குகிறது.
பஞ்சாப் அணிக்கு இன்றைய போட்டி மட்டுமல்லாமல் அடுத்து வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.சன் ரைசர்ஸ் அணியில் ஸ்டெயின், அமித் மிஸ்ரா ஆகியோர் கூட்டாக 29 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார்கள். இவர்கள் பஞ்சாப் அணிக்கு நிச்சயம் நெருக்கடியை கொடுப்பார்கள். ஷிகார் தவான், சங்ககரா, பெரேரா, பார்த்திவ் பட்டேல் ஆகியோர் பேட்டிங் வலிமையாக உள்ளது.
அதேசமயம் பஞ்சாப் அணியில் டேவிட் ஹசி, மில்லர், கில்கிறிஸ்ட், மார்ஷ் என்று பேட்டிங் வரிசை பலமாக உள்ளது. இரு அணிக்கும் முக்கியமான போட்டி என்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.