கேரளாவுக்கு கடத்தப்பட்ட 5 டன் வெடிபொருள் லாரி பறிமுதல் டிரைவர் கைது
பாலக்காடு: சேலத்தில் இருந்து கோவை வழியாக கேரளாவுக்கு கடத்தப்பட்ட 5 டன் வெடிபொருட்களை லாரியுடன் போலீசார் பறிமுதல் செய்தனர். லாரி. டிரைவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு அமோனியம் நைட்ரேட் கடத்தப்படுவதாக வெடி மருந்து தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக டிஎஸ்பி ஷாநவாஸ், ஆலத்தூர் டிஎஸ்பி சங்கர நாராயணன், நெம்மாரா எஸ்ஐ வேலாயுதன் மற்றும் போலீசார் நெம்மாரா சந்திப்பில் நேற்றிரவு வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது செம்மனாம்பதி செக் போஸ்ட் வழியாக கோழி கழிவுகள் ஏற்றி வந்த லாரியை போலீசார் மடக்கி சோதனை நடத்தினர். அதில், கோழி கழிவுகளுக்கு அடியில் 99 மூட்டைகளில் 4,950 கிலோ அமோனியம் நைட்ரேட் வெடிபொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
லாரியுடன் வெடிபொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். திருப்பத்தூரை சேர்ந்த லாரி டிரைவர் பெருமாள் (32) என்பவரை கைது செய்து விசாரித்தனர். சேலத்தில் இருந்து கேரள மாநிலம் பெரும்பாவூருக்கு வெடிபொருள் கடத்தி செல்ல முயன்றதாக டிரைவர் கூறியுள்ளார். சேலத்தில் வெடிபொருளை லாரியில் அனுப்பிய நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.