லண்டன்: சுற்றுச்சூழல் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் உலகம் முழுக்க ‘பசுமை கும்ப யாத்ரா’ என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் தொடங்கி பல நாடுகளுக்கும் சென்ற சுற்றுச்சூழல் கும்பம் தற்போது இங்கிலாந்துக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. அங்கு வரும் 24&ம் தேதி நடக்கும் யாத்திரையில் ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.
இந்தியாவில் அலகாபாத், ஹரித்வார் போன்ற இடங்களில் இந்துக்களின் புனித விழாவான கும்பமேளா கொண்டாடப்படுகிறது. ஆயிரக்கணக்கான சாதுக்கள், பக்தர்கள் விழா நடைபெறும் இடத்தில் கூடுவார்கள். புனித நீராடி வழிபாடு செய்வார்கள். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது ‘மகா கும்பமேளா’ எனப்படுகிறது. இந்தியா முழுக்க மட்டுமின்றி வெளிநாடுகளில் வசிக்கும் பக்தர்கள், சாதுக்களும் கலந்து கொள்வார்கள்.
இதேபோல, சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக ‘பசுமை கும்ப யாத்ரா’ என்ற நிகழ்ச்சி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வரும் 24&ம் தேதி நடக்கிறது. லண்டன், மான்செஸ்டர், லீசெஸ்டர், டட்லி உள்பட நாட்டின் பல நகரங்களுக்கும் இக்குழுவினர் ஊர்வலமாக செல்கின்றனர்.இதுகுறித்து பசுமை கும்ப யாத்ரா அமைப்பா ளர் குஸும் வியாஸ் கூறியதாவது: தொழிற்சாலை, வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படுகிறது. மக்கள் மத்தியில் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ‘பசுமை கும்ப யாத்ரா’ கொண்டாடுவதாக கடந்த ஆண்டில் தீர்மானிக்கப்பட்டது. முதல் பசுமை கும்பமேளா இந்தியாவின் ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் கடந்த ஆண்டு நடந்தது. இதற்காக பிரத்யேக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கும்பங்களுடன் அலகாபாத் உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் கடந்த ஆண்டு ஊர்வலம் நடத்தப்பட்டது. நேபாளம், கென்யா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கும் இது கொண்டு செல்லப்பட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டு தற்போது இங்கிலாந்துக்கு வந்துள்ளது. தென் கொரியா தலைநகர் சியோலில் பசுமை கும்பமேளா யாத்திரை அடுத்த ஆண்டு நிறைவடைகிறது.