கோயில் கருவறையில் புகுந்து கதவை பூட்டிய போதை வாலிபர்
மார்த்தாண்டம்: மார்த்தாண்டம் & குலசேகரம் ரோடு சந்திப்பில் மாகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கு இன்று காலை பூஜை நடந்தது. பக்தர்கள் சாமி கும்பிட்டனர். தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பூசாரி பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது ஜீன்ஸ் பேன்ட், டி&சர்ட் அணிந்து டிப்டாப் வாலிபர் ஒருவர் கோயிலுக்குள் நுழைந்தார். விறுவிறுவென பக்தர்களை தாண்டிக்கொண்டு முன்னேறி சென்ற அவர் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென கோயில் கருவறைக்குள் புகுந்து கதவை பூட்டிக் கொண்டார். பக்தர்களும் பூசாரியும் அதிர்ச்சி அடைந்தனர். கதவை பலமாக தட்டினர். ஆனாலும், கதவை வாலிபர் திறக்கவில்லை.
இதுகுறித்து உடனடியாக கோயில் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த கோயில் நிர்வாகிகள் வாலிபருடன் பேசினர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு கருவறையில் இருந்து அவர் வெளியே வந்தார்.
நீங்கள் யார், எதற்காக கருவறைக்குள் நுழைந்து பூட்டிக் கொண்டீர்கள் என்று கோயில் நிர்வாகிகள் விசாரித்தனர். ஆனாலும், அவர் எதுவும் பேசவில்லை. வாலிபர் குடிபோதையில் இருந்தது தெரியவந்ததால் அவரை பக்தர்கள் விரட்டியடித்தனர்.