மண்ணுளி பாம்பு கடத்திய 2 பேர் கைது மப்டியில் சென்ற போலீசாரை தாக்க முயன்றதால் பரபரப்பு
பொள்ளாச்சி: மண்ணுளி பாம்பு கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மப்டியில் வந்த போலீசாரை கடத்தல்காரர்கள் என்று நினைத்து மக்கள் சுற்றிவளைத்து தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் இருந்து சிலர் பழநிக்கு மண்ணுளி பாம்பு கடத்துவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பழநி சிறப்பு அதிரடிப்படை எஸ்.ஐ. முத்துமணிகண்டன், வனச்சரகர் கணேஷ் ராம் மற்றும் போலீசார், வனத்துறையினர் மப்டியில் பொள்ளாச்சி பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.
அம்பராம்பாளையத்தை சேர்ந்த முத்துக்குமார் (38) என்பவர் மண்ணுளி பாம்பு கடத்துவதாக தெரியவந்தது. அவரது வீட்டுக்கு சென்று போலீசார் சோதனை செய்தனர். கடத்தலில் அவருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்ததால், அவரை அதிரடிப் படையினர் வளைத்துப் பிடித்து வேனில் ஏற்றினர்.வந்தது போலீசார் என்று தெரியாமல் ‘காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. என்னை மர்ம ஆசாமிகள் கடத்துறாங்க’ என்று கத்தினார் முத்துக்குமார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். போலீஸ் வேனை சுற்றி வளைத்து தாக்க முயன்றனர். போலீசார் ஐ.டி. கார்டை காட்டிவிட்டு முத்துக்குமாரை அழைத்து சென்றனர்.
அவர் கொடுத்த தகவலின்பேரில், உடுமலைபேட்டையை சேர்ந்த லீகன் (32) என்பவரையும் போலீசார் பிடித்தனர். அவர்களிடம் இருந்து மூன்றரை அடி நீளமுள்ள மண்ணுளி பாம்பு பறிமுதல் செய்யப்பட்டது, முத்துக்குமார், லீகனிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.