26 பேரை விடுவிக்க கோரி இலங்கைக்கு எதிராக மீனவர்கள் ஸ்டிரைக்
காரைக்கால்: இலங்கை கடற்படை கடந்த மாதம் 5ம் தேதி கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த காரைக்காலை சேர்ந்த 26 மீனவர்களை சிறை பிடித்து சென்றது. அவர்களை விடுவிக்க கோரி காரைக்கால் மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கூறுகையில், Ôஆந்திர அரசு இலங்கை மீனவர்கள் சிலரை கைது செய்துள்ளது. அவர்களை விடுதலை செய்யும் போது, காரைக்கால் மீனவர்களும் விடுதலை செய்யப்படுவார்கள். இதுபற்றி இலங்கை அரசிடம் பேசி வருகிறோம் என்றார்.
இந்நிலையில், காரைக்காலில் நேற்றிரவு கிளிஞ்சல்மேடு, காரைக்கால் மேடு, திருப்பட்டினம் உள்பட 11 மீனவ கிராம பஞ்சாயத்தாரின் கூட்டம் நடைபெற்றது. இதில் 26 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க கோரி பைபர் படகு மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று 400 பைபர் படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. இந்த போராட்டத்தில் 2500க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.