70 லட்சத்தில் நடுவீரப்பட்டு சாலை சீரமைப்பு பணி துவக்கம்
ஸ்ரீபெரும்புதூர்: குன்றத்தூர் ஒன்றியம் நடுவீரப்பட்டு ஊராட்சியில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இருந்து தாம்பரம் வழியாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி, தொழிற்சாலைக்கும் செல்ல நடுவீரப்பட்டு&சோமங்கலம் சாலையினை பயன்படுத்தி வருகின்றனர்.
சோமங்கலம்&நடுவீரப்பட்டு சாலை கடந்த பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. சாலையை சீரமைக்க காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரிடம் நடுவீரப்பட்டு ஊராட்சி தலைவர் சாதனா சீனிவாசன் மற்றும் பொது மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். இதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலையை சீரமைக்க ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணி நேற்று தொடங்கியது. ஜேசிபி இயந்திரம் மூலம் சாலையில் கற்கள் தோண்டி எடுக்கப்பட்டு, பள்ளமான பகுதிகளில் ஜல்லி கொட்டப்பட்டு வருகிறது.