கூட்டுறவு தேர்தலில் அதிமுகவினர் மோதல் ஊராட்சி தலைவர் உள்பட 2 பேர் மண்டை உடைப்பு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே கூட்டுறவு சங்க தேர்தலில் அதிமுகவினர் இடையே ஏற்பட்ட தகராறில் 2 பேர் மண்டை உடைந்தது. இதையடுத்து தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.கிருஷ்ணகிரி மாவட் டம் பர்கூர் அருகே உள்ள வரட்டனப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்கு கடந்த ஏப்ரல் மாதம் 15ம் தேதி இயக்குனர் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 11 பதவிக்கும் போட்டியின்றி ஒருமனதாக இயக்குனர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அனைவரும் அதிமுகவினர் என கூறப்படுகிறது.
இதையடுத்து தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இயக்குனர்களாக தேர்வு செய்யப்பட்ட வரட்டனப்பள்ளி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாம்ராஜ் மற்றும் ஆரோக்ய இருதயராஜ் ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். இதில் ஆரோக்ய இருதயராஜியின் ஆதரவு இயக்குனர்களான பாளேபள்ளி ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ், சின்னண்ணன் மற்றும் வீரபத்திரன் ஆகியோர் வாக்களிக்க வந்தனர்.
அப்போது இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இதில் நாகராஜ் மற்றும் சின்னண்ணன் கடுமையாக தாக்கப்பட்டனர். அவர்கள் மண்டை உடைந்து ரத்தம் கொட்டிய நிலையில் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். தகவலறிந்த கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி நேரில் வந்து விசாரித்தார். மறு உத்தரவு வரும் வரை இந்த சங்கத்தின் தலைவர் தேர்தலை ஒத்திவைப்பதாக அறிவித்தார். கூட்டுறவு சங்க தேர்தலில் அ.தி.மு.க. வினர் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.