திருவள்ளூர்: அதிகாரிகள் இடமாற்றம், ஊழியர்கள் பற்றாக்குறையால் திருவள்ளூர் நகராட்சியில் வளர்ச்சி, பராமரிப்பு பணிகள் முடங்கி உள்ளது. திருவள்ளூர் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. 1 லட்சத்திற்கு மேற்பட்டோர் வசிக்கிறார்கள். வளர்ந்து வரும் நகரமாக உள்ளது. மாவட்டத்தின் அனைத்து அரசு அலுவலகமும் இங்கு உள்ளது.
திருவள்ளூர் நகராட்சியை உள்ளாட்சி தேர்தலில் முதன் முறையாக அதிமுக கைப்பற்றி உள்ளது. அமைச்சர் ரமணா தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். இங்கு நகராட்சி ஆணையர் பணியிடம் 5 மாதமாக காலியாக உள்ளது. மேலாளரும் இடமாற்றம் செய்யப்பட்டு 9 மாதம் ஆகிறது. சுகாதார ஆணையாளர், நகராட்சி பொறியாளர் ஆகியோர் பணியிடம் காலியாக உள்ளது. திருவள்ளூர் நகரத்தில் தேங்கும் குப்பைகளை அப்புறப்படுத்த நகராட்சிக்கு சொந்தமாக லாரிகள் உள்ளன. டிரைவர்கள் இல்லாததால் லாரி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நகர் முழுவதையும் சுத்தப்படுத்த குறைந்தது 100 துப்புரவு பணியாளர்கள் இருக்க வேண்டும். ஆனால் 50க்கு குறைவான துப்புரவுப்பணியாளர்கள் மட்டும் உள்ளனர். இதனால் திருவள்ளூர் குப்பை நகரமாக மாறியுள்ளது. தெருக்களில் ஆங்காங்கே குப்பை தேங்கி கிடக்கிறது.
திருவள்ளூர் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய வெள்ளியூரில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. வெள்ளியூர் குடிநீர் திட்ட பணியில் எலக்ட்ரீஷியன், வால்பு திறப்பாளர், குடிநீர் நீரேற்று நிலைய காவலாளி, பராமரிப்பு உதவியாளர், குடிநீர் நீரேற்று நிலைய காவலாளிகள் இல்லை. அடிக்கடி பழுதாகும் மின் மோட்டார்களை சரிசெய்யவும், சரியான நேரத்திற்கு நீர்தேக்க தொட்டிகளில் தண்ணீரை நிரப்புதல் உள்ளிட்ட பணிகள் முடங்கி போய் உள்ளது. இதனால் குடி நீர் தட்டுப்பாடு உள்ளது. குடிநீர் பிரச்னையை தீர்க்க கைப்பம்ப்கள் அமைக்க மக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் மக்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் லங்ககாரத் தெரு உள்பட பல்வேறு இடங்களில் அடிக்கடி குடிநீர் பிரச்னை ஏற்படுகிறது. இதனால் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
எலக்ட்ரீஷியன் பற்றாக்குறையால் பழுதடைந்த தெருவிளக்குகள் சரிசெய்யாமல் நகரமே இருளில் மூழ்கி கிடக்கிறது. எனவே காலியாக உள்ள அதிகாரிகள், ஊழியர் பணியிடங்களை நிரப்பவும், வளர்ச்சி பணிகள் தடையின்றி நடைபெற அரசு நடவடிக்கை எடுக்குமா என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.