நாடாளுமன்ற வளாகத்தில் ஆந்திர முன்னாள் முதல்வர் என்டிஆர் சிலை திறப்பு
புதுடெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ஆரின் சிலையை சபாநாயகர் மீரா குமார் இன்று திறந்து வைத்தார். ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்குதேசம் கட்சி நிறுவனருமான நடிகர் என்.டி.ஆருக்கு நாடாளுமன்ற வளாகத்தில் சிலை திறக்க வேண்டும் என அவரது மகளும் மத்திய அமைச்சருமான புரந்தேஸ்வரி கோரிக்கை விடுத்திருந்தார். இதை சபாநாயகர் ஏற்றுக் கொண்டார். இதை தொடர்ந்து புரந்தேஸ்வரியின் செலவில் 9 அடி 3 அங்குல உயரத்தில் 900 கிலோ எடையில் என்டிஆர் சிலை வடிவமைக்கப்பட்டது. மாநிலங்களவை நுழைவு வாயில் அருகே இந்த சிலையை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் அண்மையில் நிறைவு பெற்றது.
இதை தொடர்ந்து இன்று காலை 10.30 மணிக்கு என்டிஆர் சிலை திறக்கப்பட்டது. சபாநாயகர் மீரா குமார் சிலையை திறந்து வைத்தார். இந்த விழாவில் அமைச்சர் புரந்தேஸ்வரி, மகன்கள் ஹரிகிருஷ்ணா, பாலகிருஷ்ணா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். என்டிஆரின் மகளும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மகளுமான புவனேஸ்வரி விழாவில் பங்கேற்கவில்லை. என்டிஆரின் இரண்டாவது மனைவி லட்சுமி பார்வதிக்கு அழைப்பு இல்லாததால் அவர் விழாவில் பங்கேற்கவில்லை. கணவரின் சிலை திறப்பு விழாவில் தனக்கு அனுமதி கிடைக்காதது குறித்து பார்வதி வருத்தம் தெரிவித்துள்ளார். தெலுங்கு தேசம் கட்சி எம்பிக்களின் கோரிக்கையை ஏற்று அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. அவரும் இந்த விழாவில் பங்கேற்றார்.