கர்நாடக சட்டமன்ற தேர்தல் 35 ஆண்டுகளுக்கு பிறகு 71 சதவீத வாக்குபதிவு தேர்தல் அதிகாரி தகவல்
பெங்களூர்: கர்நாடக சட்டமன்ற தேர்தலில் 35 ஆண்டுகளுக்கு பிறகு 71 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கர்நாடக சட்டமன்றத்துக்கு கடந்த 5ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் நாளை 33 மையங்களில் எண்ணப்படுகிறது. தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்பில் காங்கிரசுக்கு 115 இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் பாஜ 3ம் இடத்துக்கு தள்ளப்படும் எனவும் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
நாளை மதியத்துக்குள் கர்நாடகாவில் அடுத்து ஆட்சி அமைக்கப் போவது யார் என்பது தெரிந்து விடும்.
இந்த தேர்தலில் சராசரியாக 71.29 சதவீத வாக்குகள் பதிவாயின. கடந்த 78ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 71.90 சதவீத வாக்குகள் பதிவாயின. 35 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 6 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தற்போதுதான் வாக்குப்பதிவு எண்ணிக்கை 71 சதவீதத்தை தொட்டுள்ளது. இதனை தேர்தல் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த 2008 தேர்தலின் போது 64 சதவீத வாக்குகளே பதிவாயிருந்தன. 2004ல் 65 சதவீதம், 99ல் 67 சதவீதம், 94ல் 68 சதவீத வாக்குகள் பதிவானதாக அந்த அதிகாரி தெரிவித்தார். நேற்று முன்தினம் நடைபெற்ற வாக்குபதிவில் மாநிலத்திலேயே சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 83.5 சதவீத வாக்குகளும் குறைந்தபட்சமாக பெங்களூர் நகர மாவட்டத்தில் 57 சதவீத வாக்குகளும் பதிவானது குறிப்பிடத்தக்கது.