ஜெகன் மோகன் ஜாமீன் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு
புதுடெல்லி: சொத்து குவிப்பு வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு சுமார் ஓராண்டாக சிறையில் இருக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி சார்பாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான விசாரணை முடிந்து தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.
ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி மீது ஆந்திர ஐகோர்ட் உத்தரவுபடி சிபிஐ சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு மே மாதம் 27ம் தேதி அவர் சிபிஐயால் கைது செய்யப்பட்டு ஐதராபாத்தில் உள்ள சஞ்சல குடா சிறையில் அடைக்கப்பட்டார். வரும் 27ம் தேதியுடன் அவர் சிறைக்கு சென்று ஒரு வருடம் நிறைவடைகிறது. அவர் மீது 3 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடைசி குற்றப்பத்திரிகை கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவர் சார்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் இந்த ஜாமீன் வழக்கை நேற்று விசாரித்தது. அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்கு போடப்பட்டிருப்பதாக ஜெகன் தரப்பில் வாதிடப்பட்டது. சிபிஐ தரப்பில் ஜெகனுக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. விசாரணை முடிய இன்னும் 3 அல்லது 4 மாதங்கள் ஆகும் எனவும், 7 நாடுகளில் கோடிக்கணக்கான ரூபாய் ஜெகன் முதலீடு செய்திருப்பதாகவும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.