மின் உற்பத்தி இல்லாததால் ஆந்திரா இருளில் மூழ்கி உள்ளது சந்திரபாபு நாயுடு பேச்சு
சித்தூர்:ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, காக்கிநாடாவில் உள்ள துணை மின் நிலையம் எதிரே, மின் கட்டண உயர்வை கண்டித்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
ஆந்திர அரசு மின் உற்பத்தியை பெருக்க போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், மாநிலமே இருளில் மூழ்கி உள்ளது. கடந்த 2004, 2009ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி விவசாயத்துக்கு 7 மணி நேரம் இலவச மின்சாரம் வழங்குவதாக கூறி ஆட்சியை பிடித்தது.
ஆனால், தற்போது மாலை நேரம் தொடங்கி விட்டால் மாநிலமே இருளில் மூழ்கி விடுகிறது. விவசாயத்துக்கு 2 மணி நேரம் கூட மின்சாரம் வழங்குவதில்லை. இதனால் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதற்கு மாநில அரசே பொறுப்பேற்க வேண்டும்.
ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் மீது பாரம் சுமத்தும் வகையில் மின் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏழைகளை வாட்டும் மின் கட்டண உயர்வு அவசியம்தானா? காங்கிரஸ் கட்சியினரே விமர்சிக்கும் அளவுக்கு முதல்வர் தன்னிச்சையாக செயல்படுகிறார். வரும் தேர்தலில் காங்கிரசுக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும். இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.