மக்களவை தேர்தல் எப்போது? சமாஜ்வாடி, பாஜ புது கணிப்பு
புதுடெல்லி: மத்திய அரசு மிக மோசமான பட்ஜெட்டை தாக்கல் செய்திருப்பதால் மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை என சமாஜ்வாடி தலைவர் முலாயம்சிங் யாதவ் மற்றும் மக்களவை எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர். 201314ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கடைசி பட்ஜெட் என்பதால் பல்வேறு கவர்ச்சி அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெண்களுக்கான தனி வங்கி போன்ற ஒரு சில கவர்ச்சி அறிவிப்புகள் தவிர வேறு எதுவும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. வழக்கமான வருமானவரி விலக்கு வரம்பு உயர்வு கூட இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.
இந்நிலையில் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த சமாஜ்வாடி தலைவர் முலாயம்சிங் யாதவ், மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் வராது. இது போன்ற பட்ஜெட்டை தாக்கல் செய்து விட்டு தேர்தலை சந்திக்கும் தைரியம் அவர்களுக்கு இருக்காது என்றார். மக்களவை எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறுகையில், ‘‘நிச்சயமாக இது தேர்தல் பட்ஜெட் இல்லை. நடப்பு மக்களவையின் ஆயுள்காலம் முடிந்தபின்னர் நடக்க வேண்டிய நேரத்தில் தேர்தல் நடைபெறும்’’ என்றார். மக்களவைக்கு செப்டம்பர் மாதவாக்கில் தேர்தல் நடத்த காங்கிரஸ் திட்டமிட்டிருப்பதாக கடந்த மாதம் முலாயம்சிங் யாதவ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.